(குமுதம் வார இதழில் “படித்ததும் கிழித்ததும்” என்னும் தலைப்பில் பாமரன் எழுதியதில் ஒரு பகுதி)
முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்.
‘அன்று இதே வெண்ணிலவின் போது எங்களைப் போற்றிப் பாதுகாத்த தந்தையும் எங்களுடன் இருந்தார். எங்களுக்கான குன்றும் எங்கள் வசம் இருந்தது.
இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம்… நாட்டையும் இழந்தோமே’ என பாரியின் மகளிர் அங்கவையும். சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.
இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்.
இதற்கு ‘தமிழாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுங்க’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்த்தபோது ரத்தம் சூடேறி விட்டது.
வசனம் : சுஜாதா.
நல்லது.
அங்கவை சங்கவைக்கு பதிலாக பிரியதர்ஷிணி தேவதர்ஷிணி என்றோ…. அபித குஜலாம்பாள் குசல குஜலாம்பாள் என்றோ… அல்லது சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே. எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?
‘சண்டைக்கோழி’யில் ‘குட்டிரேவதி’ என்று வந்த வசனத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு வழி பண்ணிய இலக்கியவாதிகள் அங்கவை, சங்கவை விஷயத்தில் மட்டும் சகலத்தையும் பொத்திக் கொண்டிருப்பது ஏன்?
‘படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்புப் பேரவையினர் இப்போது தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா?
‘கற்பு’ விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார்…என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் அங்கவை, சங்கவை விஷயத்தின் போது மட்டும் எங்கே போய்த் தொலைந்தார்கள்?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என்னுள் மண்டையைக் குடைந்தபடி…
இதில் வக்கிரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால் அங்கவை, சங்கவை இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பது…..
மூடர்களே….! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.
கருப்பு என்பது நிறமல்ல. இனம்.
இன்னும் உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதானால்……
Black is not a ColourTo Erase.
It is a RACE
இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை. அப்புறம்….
நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்……
எச்சரிக்கை!