நான் கடவுள் படத்தை பெரும்பாலான விமர்சகர்கள் ஆகா ஓகோ என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் படத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டுகின்றார்கள். ஆனால் திரைப்படத்தின் முடிவு பற்றி யாரும் கோபப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
“வலியால் துடிக்கும் கன்றுக் குட்டியை கொல்வதில் தப்பில்லை” என்று சொன்னதாகக் கருதப்படும் காந்தி வாழ்ந்த மண்ணில் இருப்பதால் அவர்கள் படத்தின் முடிவை இயல்பாக எடுக்கின்றார்களோ தெரியவில்லை. யார் கண்டது? பாலாவும் இதை மனதில் வைத்துக் கொண்டு முடிவை அமைத்திருக்கக் கூடும்.
உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் இன்னொரு உலகத்தை பொட்டில் அறைந்தது போன்று இந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் ஒரு பெரும் பணியை பாலா செய்திருக்கின்றார். நகைச்சுவை, கோபம், அன்பு, சிரிப்பு, அழுகை என்று அனைத்தையும் கொண்ட மனிதர்கள் அவர்கள் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் அழுத்தமாகச் சொல்கின்றார்.
படத்தில் ஒரு காட்சி. பிச்சைக்காரர்களின் ஒரு குழுவிற்கு பொறுப்பாக இருக்கும் முருகன் போதையில் வருவான். எல்லோருடனும் அன்பாக நடப்பான். தம்மால் அவர்களிற்க நிகழும் கொடுமையை நினைத்து அழுவான். சாராயமும் பணமும் கொடுப்பான். போதையில் தூங்கியபடி இருக்கும் முருகனுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி மற்றைய பிச்சைக்காரர்கள் நகைச்சுவையாகப் பேசிக் கொள்வார்கள். கால் ஊனமுற்ற ஒரு பிச்சைக்காரப் பெண் திருமணத்திற்கு மஞ்சள் கயிற்றோடு தயாராகவும் இருப்பாள்.
அடுத்த நாள் காலை அந்தப் பெண் வழமையாக பிச்சையெடுக்கும் இடத்தில் மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்தபடி மலர்ந்த முகத்தோடு அமர்ந்திருக்கும் காட்சி வரும். ஆயிரம் அர்த்தங்களை சொல்கின்ற காட்சி அது.
வாழ்வதற்கான அத்தனை தகுதிகளும் கொண்ட மனிதர்கள் இவர்கள் என்பதை ஒவ்வொரு காட்சிகளிலும் அழுத்தமாக சொன்ன பாலா, கடைசியில் இவர்கள் வாழ “இயலாத” மனிதர்கள் என்பது போன்று முடித்திருப்பது மிகப் பெரிய முரண்பாடாகப் போய் விட்டது. அதுவும் முதலாளி வர்க்கத்தை சேர்ந்த ஒரு கொடியவனால் சித்திரவதை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட ஒரு குருட்டுப் பெண் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு இயலாதவள் என்று “வரம்” அளிக்கப்பட்டவளாக செய்யப்பட்ட முடிவு கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
“இந்த சமூகத்தில் இவர்களால் மற்றவர்கள் போல் வாழ இயலாது, அப்படி வாழ்வதற்கு இந்த சமூகம் அனுமதிக்காது” என்பது இன்றைய யதார்த்தமாக இருக்கக் கூடும். ஆனால் யதார்த்தங்கள் என்பவை எப்பொழுதும் நியாயங்களாக இருப்பது இல்லை. தகுதியானவர்களை இயலுமானவர்களாகவும் ஆக்குகின்ற தீர்வைத் தேடுவதே ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு.
————————————–
தெரிந்தோ தெரியாமலோ படத்தின் முடிவு ஒரு சமூக அவலத்திற்கு தீர்வு ஒன்றை சொல்வது போன்று அமைந்து விட்டதாலும், அந்தத் தீர்வு எனக்கு அருவருப்பை உண்டாக்கி விட்டதாலும், அதைப் பற்றி எழுதுகின்றேனே தவிர, ஒரு கலை வடிவம் என்று மட்டும் பார்க்கின்ற பொழுது நான் கடவுள் ஒரு நல்ல படைப்பு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
இயக்கம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்தும் அற்புதமாகவே இருக்கின்றன. முதன் முறையாக சினிமாவில் தோன்றி நடித்த உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் நடிப்பைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. பாலா என்னும் இயக்குனருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு அற்புதமான நடிகன் நான் கடவுளில் நடித்த அனைவரின் மூலமும் வெளிப்பட்டான் என்றே சொல்ல வேண்டும்.
முருகன் பாத்திரத்தில் வருகின்ற கிருஸ்ணமூர்த்தி இதுவரை சிறு சிறு நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர். ஒரு படத்தில் வடிவேலுவிடம் பின்லேடனின் முகவரியைக் கேட்கும் பைத்தியமாக வருவார். அவரா இவர் என்று வியக்க வைக்கும் நடிப்பைத் தந்துள்ளார். தாண்டவனாக படத்தின் பிரதான வில்லன் பாத்திரம் ஏற்றிருப்பவர் பெயர் ராஜேந்திரன். இவர் சண்டைக் காட்சிகளில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து அடி வாங்குபவர். பிதாமகனில் சிறைச்சாலைக்குள் நடக்கும் சண்டையில் சித்தனால் நீண்ட தூரத்திற்கு துரத்திச் செல்லப்பட்டு கடைசியில் கம்பி இடுக்குகளுக்குள் தலையை தள்ளி தாக்கப்படுவார். இப்படி ஓரிரு காட்சிகளில் வந்த ராஜேந்திரன் நான் கடவுளில் செய்த நடிப்பு அனைவரையும் மிரட்டி விட்டது. இவைகள் சிறு உதாரணங்களே
இப்படி எல்லோரும் நடிப்பில் கலக்கியதனால், ஆர்யாவினதும் பூயாவினதும் நடிப்பு பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. பாலாவால் செதுக்கப்படுகின்ற பொழுது இது சாதாரணமானது என்ற எண்ணமே ஏற்படுகின்றது.
அதே வேளை பிதாமகனில் இருந்த திரைக்கதை நேர்த்தி நான் கடவுளில் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். இரண்டு வேறுவேறு தளங்களை தன்னுடைய திரைக்கதை உத்தியால் சரியான முறையில் இணைப்பதில் பால வல்லவர். சித்தனும் (விக்ரம்) சக்தியும் (சூர்யா) வேறுவேறு தளங்களை சேர்ந்தவர்கள். வேறுவேறு திசைகளில் செல்பவர்கள். பிதாமகனில் இந்த இரண்டு பேரும் ஒரு கோட்டில் வந்து இணைவது வெகு இயல்பாக இருக்கும்.
நான் கடவுளில் காசிச் சாமியார் உலகத்தை சோந்த ருத்ரனையும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களின் உலகத்தை சேர்ந்த அம்சவல்லியையும் ஒரே கோட்டில் இணைப்பதற்கு பாலா திணிறியிருப்பது படத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது. சில காட்சிகள் தேவையின்றி நீண்டு கொண்டே போவதும் ஒரு நெருடலாக இருக்கின்றது. கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து வருகின்ற ஒரு காட்சி வேண்டும் என்பதற்காகவே, அம்சவல்லி ருத்ரனுக்கு புத்தி சொல்வது போன்ற ஒரு காட்சியும் திணிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும் ஏற்கனவே சொன்னது போன்று பாலா ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கின்ற விதம் அபாரம். இது ஒட்டுமொத்த படத்தை உருவாக்கியதில் உள்ள குறைகளை இல்லாமல் செய்து விடுகின்றது.
————————————–
படத்தின் கடவுள் உண்மையில் இளையராஜாதான். அவருடைய இசை அனைத்தையும் கடந்து உள்ளது (கடந்து உள்ளது கடவுள்). படத்தில் இரண்டு பாடல்கள்தான் உள்ளன. அவையும் ஆரம்பத்திலேயே முடிந்து விடுகின்றன. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்று கருதுபவன் நான். பாடல்களில் இருந்து விடுபடும் வரை தமிழ் சினிமா உருப்பாடாது என்றும் நினைப்பவன். ஆனால் நான் கடவுள் படத்தின் பாடல்களை இறுவட்டில் கேட்டுவிட்டு அவைகள் படத்தில் இல்லையென்றதும் ஏமாற்றமாய்ப் போய்விட்டது. அடுத்த முறை பாலா படத்தை எடுத்து முடிந்ததன் பிற்பாடு, தேவையான பாடல்களைக் கேட்டுப் பெறுவது நல்லது. பிதாமகனிலும் ஒரு பாடல் இடம்பெறாமல் போயிருந்தது.
கடைசி இரண்டு மணித்தியாலங்களும் பாடல்கள் இல்லையென்றாலும், இளையராஜாவின் பின்னணி இசை ஒரு பிரளயம் போன்று படம் முழுவதும் நிற்கின்றது. தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு செல்லவேண்டும் என்றால், அது இளையராஜாவின் இசையைத் தவிர்த்துக் கொண்டு செல்ல முடியாது.
சுப்ரமணியபுரம், வாரணம் ஆயிரம் போன்ற படங்களைப் பார்த்த பொழுது சற்றுக் கோபம் ஏற்பட்டது. இளையராஜா ஏதோ 80களுக்கு மட்டும் உரியவர் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துவது போன்ற காட்சிகள் வந்தன. “அடப் பாவிகளா! இனி வரும் 2010களும் இளையராஜாவினுடையதுதான்” என்று நான் கடவுள் அழுத்தமாகவே சொல்லியிருக்கிறது.
அர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் பிரமிக்க வைக்கின்றது. தமிழ் சினிமாவில் இருட்டை நீலமாகத்தான் காட்டுவார்கள். இவர் கருப்பாகவே காட்டியிருக்கின்றார். காசியையும், பிச்சைக்காரர்கள் தங்குகின்ற இடத்தையும், ருத்ரன் தங்கியுள்ள குகையையும் கமெரா உள்வாங்குகின்ற விதத்தை தனியாக ஒரு முறை ரசிக்கலாம்.
————————————–
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு படம் குறித்த விமர்சனங்களை நான் படிப்பது இல்லை. விமர்சனம் என்ற பெயரில் படத்தின் கதையை வரிக்கு வரி எழுதியிருப்பார்கள். படத்தின் முடிவையும் எழுதியிருப்பார்கள். அதன் பிறகு படத்தைப் பார்க்கின்ற ஆர்வம் போய் விடும். இப்படி விமர்சனம் எழுதுபவர்கள் மீது எனக்குக் கடும் கோபம் வரும்.
ஆனால் நான் கடவுள் பற்றி எழுதுகின்ற பொழுது அதன் முடிவு பற்றி நான் எழுத வேண்டியதாகி விட்டது. நேரடியாக எழுதவில்லை என்றாலும், இதைப் படிப்பவர்களுக்கு முடிவு ஓரளவு புரிந்திருக்கும். இது பற்றிய வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் படத்தின் முடிவே இந்த விமர்னத்தின் முக்கிய புள்ளி என்பதனால் அதைத் தவிர்க்க முடியவில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளாகவே உடல் ஊனமுற்ற மக்களுக்கு எதிராக இந்த உலகம் பெரும் கொடுமைகளை செய்திருக்கின்றது. கிட்லர் போன்ற கொடுங்கோலர்கள் இந்தக் கொடுமையை நெறிப்படுத்தப்பட்ட முறையில் செய்திருக்கின்றார்கள். இன்றைக்கும் எத்தனையோ நாடுகளில் உடல் ஊனமுற்ற மக்கள் சொல்லணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை.
உடல் ஊனமுற்றவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுவதற்குப் பதிலாக, “இப்படித் துன்பப்படுவதை விட இவர்கள் இறந்து போகலாம்” என்றுதான் இந்தக் கையாலாகாத சமூகம் பேசிக் கொள்கிறது. உடல் ஊனமுற்ற இந்த மக்களின் அவலத்தை பதிவு செய்த பாலாவும் இந்தக் கையாலாகாத சமூகம் போன்று சிந்தித்து விட்டார் என்பதே எனது கோபமும் வருத்தமும்.
- வி.சபேசன் (11.02.09)
இளையராஜா பற்றி எழுதியிருப்பதைப் படித்து ரசித்தேன்
- பெயரில்லாதவன்
Good. Bala always take nonsense movies except sethu/
His movies are only eligible for awards. not for audience.
இது வரை படித்த விமர்சனங்களில்…இது மிக நேர்மையானதாக தோன்றுகின்றது……..நன்றி!
Missing is your traditional attack on hindutva.
I havent seen the film; but, read online reviews pointing out the veiled hindutva support in the film, authored by Jeyamohan.
//உடல் ஊனமுற்றவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுவதற்குப் பதிலாக, “இப்படித் துன்பப்படுவதை விட இவர்கள் இறந்து போகலாம்” என்றுதான் இந்தக் கையாலாகாத சமூகம் பேசிக் கொள்கிறது. உடல் ஊனமுற்ற இந்த மக்களின் அவலத்தை பதிவு செய்த பாலாவும் இந்தக் கையாலாகாத சமூகம் போன்று சிந்தித்து விட்டார் என்பதே எனது கோபமும் வருத்தமும்.
எனக்கும் தான். பிறப்பிலேயே நலிந்தவர்களாக பிறவி எடுத்து முதலாளித்துவங்களின் கிடுக்குப்பிடிக்குள் நசிந்து கொண்டிருந்தவர்கள் ஈற்றில் மலையை அசைக்கும் உரம் மிகுந்தவர்களாய் எழுந்து நின்றிருந்தால் இப்படம் சொல்லும் செய்தி கனதியானது.
[...] http://www.webeelam.net/?p=379 [...]
good one.
//தகுதியானவர்களை இயலுமானவர்களாகவும் ஆக்குகின்ற தீர்வைத் தேடுவதே ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு.//
true. ஆனா, இந்த படத்துக்கு அப்படி ஒரு முடிவு சொல்லணும்னா நெம்ப கஷ்டமா போயிருக்கும். ![]()
வாழ்வதர்கு லாயிக்கு இல்லாதவர்கள் என்பதால் கொல்லவில்லை. வாழ்ந்து கஷ்டப்படுவதற்கு பதிலாக இறந்து சந்தோசமாக இருக்கலாம் என்று தான் மரணம் பரிசாக அழிக்கப்படுகிறது. சற்று பிரக்டிகலாக யோசித்துப்பார்த்தால் உண்மை புரியும்.
நான் படம் பார்த்தேன். படத்தில் கதையே இல்லை.மூளை சலவை செய்யக் கூடிய விஷம் படம் முழுவதும்.
வேதம் சொன்னதாக ( ஒரு வேளை கல்கி அவதாரத்தை ) சொல்லிக் கொண்டு கொலை செய்ய ஆரம்பிக்கிரான் இந்த பைத்தியக் காரன், போதையில் இருப்பவன், ( ஒரு வேளை தன்னிலை மறந்த சாமியார் ( பாலா? ஜெய மோகன் ? ) ) ஒருவன் வடக்கில் இருந்த்து வந்தாலே இப்படி … காட்சியில் பல அஹோரிகள் ( ய்ப்பா..பயமா இருக்கு… எதிர் கால இந்தியா …)
அப்போ பாலா சார் …. கஞ்சா குடிக்கிரவன் வாழ்லாம் …. உடல் ஊனமுற்ரோர் வாழக் கூடாதா?
என்ன கொடுமை சார்..
” சேது படம் எடுக்கும் போது மூச்சு முட்ட குடித்து விட்டு என்ன எடுப்பது என்று தெரியாமல் … 100 மொட்டை தலைகள் வேண்டும் என்று கேட்க அதற்கு கந்தசாமி ( தயாரிப்பாளர்) 99 ரெடியா இருக்கு கடைசியா நான் தான் கடைசி நான் வேணும்னா போட்டுக்கவா ? என்று கேட்டது நினைவுக்கு வருது…”
liked the review. Can you review Charu’s look on this film?? Pls visit charuonline.com