எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள்.
அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன்.
என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தக் கூடாது” இப்படியான கோரிக்கைகளோடு மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற கட்டுரைகளையும் எழுதக் கூடாது என்பது போன்ற என்னுடைய வழமையான நிபந்தனைகளையும் கூறினேன். அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள். உண்மையிலேயே எழுதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என்னோடு தொடர்பு கொண்ட இன்னும் ஒருவர் செய்திகளை எழுதித் தருவதாகக் கூறினார். வெப்ஈழத்தை ஆரம்பித்த பொழுது தொடர்ந்து செய்திகளையும் இணைத்து வந்தேன். செய்திகளை முந்தித் தருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தேன். போர் ஆரம்பித்த பொழுது செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் தருகின்ற பணியையும் மேற்கொண்டிருந்தேன்.
ஆனால் ஒரு நேரத்தில் வன்னியில் இருந்து போர் குறித்த செய்திகளை பெறுவது கடினமாகிப் போனது. தமிழர் தரப்பில் பல நேரங்களில் மௌனம்தான் நிலவியது. தமிழர்களின் செய்தி ஊடகங்களை விட “டிபென்ஸ்.எல்கே” இணையத்தளம் நம்பகரமானதாக மாறிப் போன துர்ப்பாக்கிய நிலையும் நேர்ந்தது. இப்படியான ஒரு நேரத்தில் செய்திகளை இணைப்பதை நிறுத்திக் கொண்டு கட்டுரைகளை மட்டும் வெப்ஈழத்தில் வெளியிட்டு வந்தேன்.
தற்பொழுது ஒருவர் செய்திகளை தொடர்ந்து வழங்குவதாக கூறியிருக்கிறார். போர் நின்று போய் ஸ்கோர்களும் வெளிவராத ஒரு நிலையில் மக்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பார்களா என்பது தெரியவில்லை. ஆயினும் இலங்கைத் தீவில் அரசியற் களம் சற்று சூடு பிடித்திருப்பதாலும், நான் கட்டுரைகள் எழுதுவதற்கு எடுக்கின்ற இடைவெளிகளை நிரப்பும் என்பதனாலும் செய்திகளை தருவதாக அவர் சொன்னதை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
………………………..
முள்ளிவாய்க்காலில் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் நான் என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் விவாதித்த மூன்று யோசனைகளைப் பற்றி மீண்டும் தொடர்கின்றேன். இதிலே புறநிலை அரசு ஒன்றை அமைக்கின்ற திட்டத்தைப் பற்றித்தான் பலர் ஆர்வமாகப் பேசினார்கள். இந்த யோசனை பலருக்குள் முன்னமேயே இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம்.
இரண்டாவது யோசனையாகிய “குடியேற்றத் தமிழீழ நாடு” அமைப்பது பற்றி பலர் ஆதரவாகப் பேசினாலும் அதை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதாகவே அவர்கள் கருதினார்கள்.
“குடியேற்றத் தமிழீழ நாடு” பற்றி நான் கடந்த முறை தந்த இணைப்பை படிக்காதவர்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். பரப்பளவில் பெரிதாக இருக்கின்ற மூன்றாம் உலக நாடு ஒன்றிடம் “சிங்கப்பூர் அல்லது யாழ் குடா” அளவிற்கான ஒரு சிறிய நிலப் பகுதியை வாங்கி, அதில் குறிப்பிட்டளவிலான தமிழர்கள் குடியேறி, அங்கேயிருந்தபடி தமிழீழத்தை மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்வதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தத் திட்டம்.
இது பற்றி கடந்த கட்டுரையில் தந்திருக்கின்ற இணைப்பில் பலர் பலவிதமான தகவல்களை தந்திருக்கிறார்கள். ஒருமுறை கட்டாயம் படித்துப் பாருங்கள்.
இப்படி முதலாவது யோசனைக்கு வரவேற்பும், இரண்டாவது யோசனைக்கு கொள்கை அளவிலான ஆதரவும் இருந்த நிலையில் முன்றாவது யோசனைக்கு என்னுடைய நட்பு வட்டாரத்தில் பெரிதளவான வரவேற்பு இருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்கள். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
இந்த மூன்றாவது யோசனை பற்றி எனக்குள்ளேயே நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தன. தமிழினம் போரினால் பேரழிவை சந்தித்திருக்கின்ற ஒரு நிலையில் இதைப் பற்றி பேசலாமா என்கின்ற தயக்கம் எனக்குள் பெரியளவில் அன்றைக்கு இருந்தது. இன்றைக்கும் இருக்கின்றது. எங்கே என்னை ஒரு “மொக்கன்” என்று நினைத்து விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது.
சரியோ, தவறோ, சாதகமானதோ, பாதகமானதோ, நல்லதோ, கெட்டதோ, எதுவாயினும் தமிழீழப் போராட்டத்தை உயிரோடு வைத்திருக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற இன்றைய நிலையில் என்னுடைய தயக்கங்களை தள்ளி வைத்து விட்டு அந்த மூன்றாவது யோசனை பற்றியும் சொல்கிறேன்.
புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற குடியுரிமை பெற்றுள்ள தமிழ் இளைஞர்கள் அந்தந்த நாடுகளில் இராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் அது.
இதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில நாடுகளில் கட்டாய இராணுவப் பயிற்சி என்பது நடைமுறையில் இருக்கின்றது. சில நாடுகளில் சுயவிருப்போடு குறிப்பிட்ட கால இராணுவப் பயிற்சி எடுப்பதற்கான வழிவகைகள் இருக்கின்றன. இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுத்திருப்பதை பெரும்பாலான நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.
உதாரணமாக ஜேர்மனியை எடுத்துக் கொள்வோம். ஜேர்மனியில் கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் இருக்கின்றது. பதினெட்டு வயது நிரம்பிய ஜேர்மனிய இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவப் பயிற்சி எடுக்க விரும்பாதவர்கள் அதற்கான காரணங்களை விளக்கி ஒரு மனு கொடுப்பதோடு, ஒரு சமூக சேவை சார்ந்த நிறுவனம் ஒன்றில் தொண்டாற்றி இராணுவப் பயிற்சி எடுப்பதிலிருந்து விலக்குப் பெறலாம்.
இராணுவப் பயிற்சி எடுப்பதலிருந்து விலக்குப் பெறுவதற்கான மனுக்களை குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞர்களுக்கு பலமுறை நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன். “என்னுடைய மதம் ஆயுதம் ஏந்துவதை தடுக்கிறது, எனக்கு காந்தி மீதும் அகிம்சை மீதும் பெரும் பற்று இருக்கிறது” என்று பொய்களை அடுக்கியபடி அந்த மனுவை எழுத வேண்டும்.
இப்பொழுது அப்படியான மனு ஒன்றை எழுதித் தரும்படி வருகின்ற இளைஞர்களிடம் இராணுவப் பயிற்சி எடுப்பது பற்றி சிந்திக்கும்படி மெதுவாக கூறி வருகின்றேன்.
மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். உலகில் பல இனங்களும் மதங்களும் சில செயற்பாடுகளை ஒரு கடமையாக மேற்கொண்டு வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் எமது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதை ஒரு இனக் கடமையாக ஆக்குவோம். பதினெட்டு வயது நிரம்பிய தமிழ் இளைஞர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் என்றாலும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்பதை ஒரு சட்டமாக ஆக்குவோம்.
கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் உள்ள நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மனுப் போட்டு சமூக சேவை செய்யப் போகாது இராணுவப் பயிற்சியை எடுக்கட்டும். சுய விருப்போடு படைப் பயிற்சி எடுக்கும் வசதி உள்ள நாடுகளில் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து பயிற்சியைப் பெற்றுக் கொள்ளட்டும். இந்த வசதிகள் ஏதும் இல்லாத நாடுகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இணைந்து பயிற்சிகைளப் பெற்றுக் கொள்ளட்டும்.
தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நிகழ்த்திய பேரழிவை எமது இளைஞர்களுக்கு சொல்லி சொல்லி தமிழீழக் கனவோடு அவர்களை வளர்த்தெடுத்து இராணுவப் பயிற்சி பெற வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் உலகம் உள்ள தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஒன்று கூடி தமிழீழம் அமைக்கின்ற உறுதிமொழியை எடுப்போம்.
இப்பொழுது ஒரு அண்ணளவான கணக்கைப் பார்ப்போம். ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். இதில் ஒரு இலட்சம் பேர் இளைஞர்களாக இருப்பார்கள். இதில் ஒரு பத்தாயிரம் பேர் இராணுவப் பயிற்சி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பத்து ஆண்டுக்குள் இராணுவப் பயிற்சி பெற்ற ஐம்பதினாயிரம் இளைஞர்களை உருவாக்க முடியும்.
இதில் பெரும்பாலானவர்கள் அடிப்படையான இராணுவப் பயிற்சிகளைப் பெற்றிருக்க, குறிப்பிடத்தக்க அளவினர் நிச்சயமாக அதையும் தாண்டி உயர் பயிற்சிகளும் பெற்று, அதிகாரிகள் தரத்திலான நிலையையும் அடைந்திருப்பார்கள். சிலர் கள அனுபங்களையும் பெற்றிருப்பார்கள். தரைப்படை, கடற்படை, வான்படை போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தவர்கள் உருவாகியிருப்பார்கள்.
சரி! இவர்களை கொண்டு சிறிலங்கா மீது படையெடுப்பதா அடுத்த திட்டம் என்று யாரும் அவசரப்பட்டு கேட்க வேண்டாம். பொருளாதார வளத்தோடு “இராணுவப் பயிற்சி பெற்ற பெரும் இளைஞர் படை” என்ற பலத்தையும் துணையாகக் கொண்டு சிறிலங்காவை எம்மோடு “பனிப் போருக்குள்” இழுத்து ஒரு “மிரட்டல் அரசியல்” நடத்துவதுதான் அடுத்த திட்டம்.
தமிழர்கள் தமிழீழக் கனவை கைவிடவில்லை என்பதும் இராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பதும், அதில் சில ஆயிரம் இளைஞர்களாவது தம்பாட்டில் திடிரென்று இலங்கைத் தீவில் நுழைந்து கிளர்ச்சியை ஆரம்பிக்கின்ற சாத்தியங்கள் இருக்கின்றன என்பதும் சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் நெருக்கடியாகவும் அமையும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
ஈழத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரித்தால் மீண்டும் ஒரு முறை ஈழப் போருக்கான சாத்தியங்கள் உடனடியாகவே உருவாகிவிடும் என்கின்ற அச்சம் சிறிலங்காவிற்கு என்றைக்கும் இருக்க வேண்டும். தாம் போரில் வென்று விட்டோம் என்ற மமதையில் இருக்கின்ற சிறிலங்காவை ஒரு தற்காப்பு நிலைக்குள் தள்ள வேண்டும். பேரம் பேசுகின்ற பலம் தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதை சிறிலங்கா அரசு நம்பும்படி செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு ஓரளவாவது உரிமைகளை வழங்குவதற்கு சிறிலங்கா அரசை தூண்டக் கூடிய இப்படியான ஒரு மிரட்டல் அரசியலுக்கோ அல்லது தமிழீழத்தை விடுவிக்கும் போராட்டத்திற்கான ஒரு படிநிலைக்கோ இந்த மூன்றாவது யோசனை பயன்படும் என்று நம்புகின்றேன். கடந்த கட்டுரையில் கூறியது போன்று மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்துவது என்றாலும் தமிழர்களுக்குள் இனப் பற்றும், ஓர்மமும், ஓற்றுமையும் மிக அவசியம். இல்லையென்றால் சராணாகதி அரசியல் செய்வதே எமக்கு உள்ள வழியாக மிஞ்சும்.
இந்த மூன்றாவது யோசனையின் சாதக பாதகங்கள் பற்றி நாம் தொடர்ந்து பேசவோம். சில நாட்கள் கழித்து இது பற்றி மீண்டும் எழுதுகிறேன்.
- வி.சபேசன் BA.Pol.Sci.
yosikka vENdiya vitayam
///ஈழத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரித்தால் மீண்டும் ஒரு முறை ஈழப் போருக்கான சாத்தியங்கள் உடனடியாகவே உருவாகிவிடும் என்கின்ற அச்சம் சிறிலங்காவிற்கு என்றைக்கும் இருக்க வேண்டும்.///
ஆமாம்…!
” சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி ” என்பது போல , சும்மா கிடந்த வன்னியை தேவையில்லாமல் சொறிஞ்சு கொழும்பை விட்டான் சிங்களவன் என்பதை இனி வரலாறு சொல்லும் .
அரியாலை தாண்டி யாழ்ப்பாணம் போனால் இழப்பு வரும் என்று உணர்ந்த 2000 ஆம் ஆண்டிலேயே வன்னியை விட்டு வேறு இடம் தெற்கே போக வேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும் . அதுதான் சமாதான காலத்திலே நடந்தது . அதாலதான் வன்னியை தக்க வைக்க பெரிய அக்கறை காட்ட படவில்லை . சுருக்கமாக சொன்னால், வன்னி பல ஆண்டுகளுக்கு முன்பே தெற்கே மாறி விட்டது .
hi y u dont write more?
uRakkam?