வாரியாருக்கு தமிழை பிடிக்காது, வடமொழியைத்தான் பிடிக்கும் என்று சிலர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுக்கான எதிர்வினையே இந்தப் பதிவு.
 
 கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவராக விளங்கினார். கம்பராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம், திருப்புகழ், திருவருட்பா, திருமுறைகள் இவருக்கு தண்ணீர் பட்டபாடு. இவர் தமிழ் சொற்பொழிவு ஆற்ற தொடங்கி விட்டால் போதும். கூட்டத்தில் உள்ளவர்கள் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல அப்படியே சொக்கி விடுவார்கள். சொற்பொழிவுக்கு இடை இடையே நகைச்சுவையை கலந்து பேசி மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க செய்வது வாரியாரின் தனி பாணி. எதைச் சொன்னாலும் சுவையாக சொல்லும் திறமை படைத்தவர்.
 
 கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் ஒரு பாடலைப்பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார். அந்தப் பாடலில் “அம்மை” என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் “சுவாமி! ‘அம்மை’ யில் வரும் ‘ஐ’ இரண்டு மாத்திரையாயிற்றே!” என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், “ஆம், ‘ஐ’ க்கு 2 மாத்திரை தான், ஆனால் இந்த ‘ஐ’க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்” என்று விளக்கினார். இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரை வடமொழி ஆதரவாளர் என்று சிலர் சொல்வது நகைச்சுவையின் உச்சகட்டம்!
 
 இலக்கணமே நன்கு படித்த பலருக்குத் தலைக்கனம். சிலரோ பயந்து ஓடுவார்கள். அதில் இந்த ஐகாரக் குறுக்கம், ஓகாரக்குறுக்கம், குற்றியலுகரம், குற்றியலிகரம், அளபெடை என்றால் போதும். அவ்வளவுதான். ஆளை விட்டாலே போதுமென்று பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிவர்! ஆனால் வாரியார் அப்படி அல்ல. தமிழின் அமுதத்தை முழுமையாகப் பருகியவர்.
 
 வாரியார் சுவாமிகள் ஒரு தமிழ்ப் பெருங்கடல். நினைத்த பொழுதில் விரும்பிய கருத்தில் வெண்பாக்களை இலக்கணப் பிழையின்றி வடிக்கும் தெய்வத் தமிழர். யாராவது போய், மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் என்றாலோ வீட்டு விசேசம் என்றாலோ அவர் உடனே அவர்களின் பெயர்களை வைத்தே வாழ்த்து வெண்பா எழுதும் திறமை கொண்டவர். இதனை அவரின் பக்தர்களிடமே கேட்டுத் தெளிவு பெறலாம்.
 
 திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பல்லாண்டு காலம் ஆசிரியராக இருந்து படைத்த திருப்புகழமிர்தம் என்னும் மாத இதழ்களைப் பற்றித் தெரியுமா இந்த வடமொழி ஆதரவாளர்களுக்கு? வாரியாரைப் போலத் தமிழை வாரி யார் தந்தார்? காரியார் மேகம் பொழியும் மழையைப் போல தமிழ் மழை பொழிந்தவர் வாரியார்.
 
 ”ஆன்மீக தமிழ்ப்பழம் அனைத்து நாட்டு தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்து விட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பி பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மீகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டி விட்டு, இயற்கை தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்றார் கருணாநிதி வாரியார் இறந்தபோது. தமிழ்ப் பெருங்கடல் என்று நாத்திகரான கருணாநிதியே போற்றிய அந்த ஆத்திகப் பெருங்கடல் வாரியார்.
 
 வியாபாரிகளே, நிங்கள் உங்கள் கடையில் எந்தப் படத்தை வேண்டுமானாலும் மாட்டுங்கள்; ஆனால் கலப்படம் மட்டும் வேண்டாம்! - கிருபானாந்த வாரியார்.
 
 ”நேற்று” என்பது உடைந்த மண் பானை; “நாளை” என்பது மதில் மேல் பூனை; “இன்று” என்பது அழகிய ஒர் வீணை! - கிருபானாந்த வாரியார்.

 
 இந்த இரண்டு வாசகங்களும் உணர்த்தும் கருத்துக்கள் ஆழமானவை, ஆனால் சொல்லிய விதமோ மிக மிக எளிதானவை. இதை சிந்திக்கும் பொழுது, நம்மை அறியாமல், நாமே உணர்கிறோம். நம் தமிழ் மொழிதான் எத்தனை அழகானது!” ஆனால் வடமொழியை ஆதரிக்கும் கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
 
 ஒருமுறை வாரியார் சுவாமிகள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ” முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன?” என்று கேட்டார். சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே “சிவாஜி” எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், “அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே” என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொல்லி நிலைமையைச் சமாளித்தவர் வாரியார்.
 
 வாரியார் அடிக்கடி சொல்வார். முந்துதமிழ் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? தமிழ் முந்துமாம். எங்கே முந்தும்? ஒரு போட்டியில். தடித்த, கனமான எழுத்துகள் உள்ள வடமொழி இன்று பேச்சுப் பயன்பாட்டிலிருந்தே ஒழிந்து செத்துப்போன நிலை. ஆனால் முன்பிறந்த மூத்த பழைய மொழியான நம் தமிழ்.. இன்னமும் முடிந்த வரையில் தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு பேச்சு வழக்கிலும் உள்ளது. எழுத்து வழக்கிலும் உள்ளது. நாளுக்குநாள் அதன் மெருகு கூடிக்கொண்டே வருகிறது. ஒல்லியானவனும் கனமானவனும் ஒரு பந்தயத்தில் ஓடினால், கனமில்லாத ஒல்லியானவன் முந்துவான் அல்லவா? அதுபோல நம் தமிழ் எளிதில் முந்தும்! என்று தொடர்வார் தமிழ் பற்றாளர் வாரியார்.

ஆக்கம் : பெரியர் தொண்டன் கருப்பு சதீஸ்

Posted in வகைப்படுத்தாதவை | Read More »
Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99