Posted on 10:07 Hrs,August 22nd, 2009 by webeelam
அவன் அரை மயக்கத்தில் கட்டிலில் கட்டுண்டு கிடந்தான். அவனக்கு முன்னால் அவள் கையில் குழவிக்கல்லோடு நின்றாள்.

……………………………..

அவளுக்கு காதலிக்கும் உரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அவளுடைய கணவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களே அவளுக்கான காளையை தேடினார்கள். கட்டியும் வைத்தார்கள். அவளும் அவனும் முதன் முறையாக எத்தனை மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே சொன்னார்கள்.

இதுவரை அறிமுகம் இல்லாது அவனுடன் வாழ்ந்து, இதுவரை அறிமுகம் இல்லாத அவனுடைய சொந்தங்களையும் அனுசரித்து, பிள்ளைகள் பெற்று, வரவு செலவுக்குள் வாழ்க்கையை நடத்தி, சண்டை சச்சரவுகளை சமாளித்து, குழந்தைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில் வரக் கூடிய சோதனைகளை எல்லாம் எதிர்த்து நின்று….. இப்படி எல்லாவற்றிற்குமான பக்குவமும் தகுதியும் அவளுக்கு வந்துவிட்டதாக அவர்கள் கருதினார்கள்.

தன்னுடைய துணையை தேர்ந்தெடுப்பதற்கே தகுதி இல்லாத அவளிற்கு இத்தனைக்குமான தகுதிகள் எப்படி வந்தன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கிறாள்

……………………………..

அவளைக் கட்டிக் கொண்ட அவனோ பெரும் கொடுமைக்காரன். சாராயம் அவனை தினமும் குடிக்கும். குடித்துவிட்டு வாந்தியை அவள் மீதுதான் எடுக்கும். குடிக்காத நேரங்களிலாவது அவன் மனிதனாக இருந்தானா என்றால் அதுவும் இல்லை. ஊரில் உள்ள அத்தனை ஆண்களுடனும் அவளை தொடர்புபடுத்தி பேசினான். இது ஒரு உளவியல் பிரச்சனை என்பது அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. பாவம், இதை தெரிந்து கொள்கின்ற அளவிற்கு படிப்பதற்கு அவளை அவர்கள் அனுமதித்திருக்கவுமில்லை.

அவனைப் பற்றி அவள் அவர்களுடன் பேசினாள். அவர்கள் அனுசரித்துப் போகும்படி சொன்னார்கள். நீதான் அவனை மாற்ற வேண்டும் என்று வேறு சொன்னார்கள். யாரோ ஒரு குடிகாரனை இவர்கள் கட்டி வைப்பார்களாம். அவனை நல்லவனாக்குவதையே இவள் தன்னுடைய வாழ்க்கைக் கடமையாகக் கொள்ள வேண்டுமாம்.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கிறாள்

……………………………..

பக்கத்து வீட்டிற்கு புதிதாகக் குடி வந்தவன் ஒருநாள் அவளைப் பார்த்து கனிவாகப் புன்னகைத்தான். அவள் தன்னை புதிதாக உணர்ந்தாள். புன்னகைத்தவனோடு பேசத் துணிந்தாள். கணவன் தந்த காயங்களுக்கு புன்னகைத்தவன் மருந்து போட்டான். அவள் முதன் முதலாக காதலிக்கத் தொடங்கியிருந்தாள்.

ஒருநாள் காதலோடு உடல்கள் இணைவதே பேரின்பம் என்பதையும் அவள் அறிந்து கொண்டாள். காதலனோடு பின்னிப் பிணைந்து காமத்தை அப்போதைக்கு இறக்கி வைத்து விட்டு வருகின்ற பொழுது, அந்த அனுபவம் தந்த இன்பத்தோடு, அவர்களை வென்றுவிட்ட பெருமிதமும் அவளுக்கு இருந்தது.

பெண்கள் எல்லோருமே கண்காணிப்பில் இருப்பதால் அவளின் காதல் ஒருநாள் கணவனும் அறியும்படியானது. இதுவரை அவன் செய்த சித்திரவதைகள் அவளுக்கு பழக்கமாகி விட்டிருந்தன. ஆகவே அவள் புதிதாக எந்தத் துன்பத்தையும் அனுபவிக்கும்படி நேரவில்லை. ஆயினும் அவன் சொன்ன ஒரு சொல் அவளை மிகவும் காயப்படுத்தி விட்டது.

இப்பொழுது அவள் குழவிக்கல்லோடு நிற்கின்றாள்

……………………………..

அவனுக்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து, மயங்கியவனைக் கட்டிலில் கிடத்தி, கயிற்றினால் இறுகக் கட்டி விட்டு, கையில் குளவிக்கல்லை வைத்துக் கொண்டு அவன் விழிப்பதற்காக அவள் காத்துக் கொண்டு நின்றாள்.

மெதுவாகக் கண்ணைத் திறந்தவனுக்கு விபரீதத்தை உணர சற்று நேரம் எடுத்தது. அவன் வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவள் பேசத் தொடங்கினாள். “நான் என்னவனோடு போகப் போகிறேன்… போவதற்கு முன் உன்னைக் கொல்ல வேண்டும்… உன்னைக் கொல்வதற்கு முன் உன்னோடு சற்றுப் பேச வேண்டும்”

அவளைப் பார்த்து அவன் முதன்முறையாகப் பயந்தான். கண்களில் மரண பயம் தெரிந்தது. “போவது என்றால் போக வேண்டியதுதானே? எதற்காக என்னைக் கொல்ல வேண்டும்?” என்ற கேள்வியும் அந்தக் கண்களுக்குள் தெரிந்தது.

“இரண்டு காரணங்கள் இருக்கின்றன” அவள் அமைதியாக சொன்னாள். “நீ எவ்வளவு கொடியவன் என்பது எனக்குத் தெரியும்.. என்னையும் என் காதலனையும் நீ வாழ விடமாட்டாய்… என்னுடைய உயிரையும் என் காதலனின் உயிரையும் உன்னிடம் இருந்து காப்பதற்காக உன்னைக் கொல்ல வேண்டியிருக்கிறது… இது முதற் காரணம்.. எங்களின் காதலை நீ கள்ளக் காதல் என்று சொல்லி என்னைக் கோபப்படுத்தி விட்டாய்… இது இரண்டாவது காரணம்” அவள் அழுத்தமாகச் சொன்னாள்.

“எனக்கும் உனக்கும் எப்பொழுதாவது காதல் இருந்ததா? இல்லையே! நல்ல காதல் என்கின்ற ஒன்று இருந்தால் அல்லவா கள்ளக் காதல் என்றும் ஒன்று இருக்க முடியும்? என் காதலனைத் தவிர வேறு யாருடனும் எனக்குக் காதல் இல்லாத பொழுது, என்னுடைய காதல் எப்படிக் கள்ளக் காதலாக முடியும்? என்னுடைய நல்ல காதலை நீ கள்ளக் காதல் என்று அவமானப்படுத்தி விட்டாய்! நல்ல காதலைத் தரத் தெரியாத நீ என்னுடைய காதலை அவமானப்படுத்தியதற்காகவாவது சாகத்தான் வேண்டும்!”

சொல்லி விட்டு குழவிக்கல்லை ஓங்கி அவன் தலை மீது போட்டாள்

முற்றும்.

வி.சபேசன் (22.08.09)
Posted in குறுங்கதைகள் | Read More »

Comments

kanna on 22 August, 2009 at 11:03 pm #

ennada ithu?


Kumaran on 23 August, 2009 at 4:08 am #

Niyaayamaana Vaatham..
Aanaa ippa ithuvaa mukkiyam..??
Meendum Adimai Vaalvil Moolkum Thamilinaththirkku
Thannampikkai ooddum vakaiyil eluthunkaiya..


pragash on 24 August, 2009 at 9:06 pm #

இப்படியும் யோசிக்கலாம் எண்டு யோசிகல. நல்லத்தான் இருக்கு.


arthamatra indian unmai tamilan on 5 September, 2009 at 10:07 pm #

tamilanuku ithu puthithu !

kumaran karuthum sariye


Thuyaval on 11 September, 2009 at 12:31 pm #

ungkalaipol yatharthavaathikal irunthal em ponra penkaluku manathalavil viduthalai nichhayam


thotta on 26 December, 2009 at 3:03 pm #

THUVAKKU VAITHIRUPAVAN YAARAIUM SUDALAM PEN VAITHIRUPAVAN EPDIUM EELUTHALAM::::::::


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99