“மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் “பனி விழும் இரவு” என்று ஒரு அற்புதமான பாடல். அந்தப் பாடலில் இடையில் ஒரு காட்சியில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பான்.

இதுதான் பிரபுதேவா முதன் முறையாக திரையில் தோன்றிய காட்சி. சிறுவனாக இருந்தவர் சற்று வளர்ந்ததும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் உருவான நடனங்களில் தலையைக் காட்டத் தொடங்கினார்.

நன்றாகக் கவனித்தால் “அக்னி நட்சத்திரம்” படத்தில் “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுக்கு கார்த்திக்குக்கு பின்னால் ஆடிக் கொண்டு நிற்பார். இப்படி பின்னால் ஆடியவர் மெது மெதவாக வளர்ந்து முன்னால் ஆடுகின்ற அளவிற்கு வந்தார். 

ஜென்டில்மேன்” போன்ற சில படங்களின் வெற்றிக்கு இவருடைய நடனமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கதாநாயகனாக நடிப்பதற்கும் அழைப்புகள் வந்தன.

ஒரு நேரத்தில் “அடுத்த சுப்பர் ஸடார்” என்று பத்திரிகைகள் அவரைப் பற்றி எழுதுகின்ற அளவிற்கு அவருடைய வளர்ச்சி இருந்தது.

பிரபுதேவாவின் வளர்ச்சி

பிரபுதேவா கதாநாயகனாக நடித்த “காதலன்” திரைப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. பக்கத்து வீட்டுப் பையனை மாதிரி இருந்த பிரபுதேவாவை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அந்தக் காலத்தில்தான் “அடுத்த சுப்பர் ஸ்டார்” ஆகின்ற வாய்ப்பு பிரபுதேவாவிற்கு இருப்பதாக சில பத்திரிகைகள் எழுதின.

இப்பொழுது போன்று அப்பொழுது “சுப்பர் ஸ்டார்” நாற்காலிக்கு கனவு கொண்டிருந்த நடிகர்கள் என்று யாரும் இருக்கவில்லை. ரஜினி கமலுக்கு அடுத்த இடத்திற்கான போட்டிதான் இருந்தது. விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்றவர்கள் மூன்றாம் இடத்தைப் பெறுவதற்கான போட்டியில் மும்மரமாக இருந்தார்கள்.

விஜய், அஜித் அறிமுகமாகியிருந்தார்கள். ஆனாலும் பெரிய வெற்றிகள் அவர்களை தேடி வரவில்லை. சொல்லப் போனால் அப்பொழுது அவர்களை பலருக்கு தெரிந்திருக்கவும் இல்லை.

ஆனால் பிரபுதேவாவின் நடனமும், அது தந்த பிரமிப்பும் “காதலன்” படத்தின் மிகப் பெரும் வெற்றியும் பிரபுதேவா பற்றிய எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

இப்படி புகழின் உச்சியில் இருந்த பிரபுதேவாவைப் பற்றி அப்பொழுது ஒரு பரபரப்பு செய்தி பரவியது. நடனக் குழுவில் ஆடுகின்ற ஒரு பெண்ணை பிரபுதோவ இரகியத் திருமணம் செய்து விட்டார் என்கின்ற அந்தச் செய்தி பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.

ரம்லத்

பிரபுதேவாவின் தந்தையான சுந்தரம் மாஸ்டரின் குழுவில் ஆடிக் கொண்டிருந்த பெண் அவர். பெயர் ரம்லத். ஒரு முஸ்லீம். கூட்டத்தோடு கூட்டமாக ஆடுகின்ற ஒருவர்.

சுந்தரம் மாஸ்டர் நடனம் அமைத்த படங்களில் பின்னணியில் கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த அவருக்கும் அதே கூட்டத்தில் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவாவிற்கும் காதல் மலர்ந்தது.

பிரபுதேவா நடனம் அமைத்த படங்களிலும் ரம்லத் குழுவில் ஆடினார்.

ஆனால் பிரபுதேவா போன்ற ரம்லத்தால் முன்னணிக்கு வர முடியவில்லை. அதற்கான வாய்ப்புகள் குழுவில் ஆடுகின்ற நடனப் பெண்களுக்கு அமைவதும் இல்லை. சிலருக்கு மட்டும் கவர்ச்சி நாயகியாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடக் கூடிய வாய்ப்புக் கிடைக்கும். சிலர் தமது தொடர்புகள் மூலம் சில துணைப் பாத்திரங்களை பெறுவதும் உண்டு.

சர்மிலி, அனுஜா போன்றவர்களை இந்த இடத்தில் குறிப்பிடலாம். இவர்களும் குழுவில் ஆடியவர்கள்தான். அனுஜா ஒரு காலத்தில் மணிவண்ணனின் அனைத்துப் படங்களிலும் இருப்பார். கவர்ச்சி நடனங்களை செய்தார். இப்பொழுது சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சர்மிலி கவுண்டமணிக்கு சோடியாக பல படங்களில் நடித்தார். கடைசியாக சகீலாவுக்கு போட்டியாக சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். தற்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

நடனக் குழுவில் ஆடுகின்ற பெண்களால் இதைத் தாண்டி முன்னணிக்கு செல்ல முடியாது. பிரபுதேவாவை காதலித்த ரம்லத்திற்கு கவர்ச்சி நடனம் ஆடி முன்னுக்கு வருகின்ற சிந்தனை இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

கடைசி வரை அவர் குழுவில்தான் ஆடினார். பிரபுதேவா கதாநாயகனாக நடித்த காதலன் படத்தில் இடம்பெற்ற “கோபாலா கோபாலா” போன்ற பாடல்களிலும் ரம்லத் கூட்டத்தோடு கூட்டமாக பின்னணியில் ஆடினார்.

காதலும் திருமணமும்

ரம்லத் என்கின்ற குழுவில் ஆடுகின்ற ஒரு சாதரண நடனப் பெண்மணியை பிரபுதேவா திருமணம் செய்தார் என்கின்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை உருவாக்கியது.

அந்த நேரத்தில் பல நடிகைகள் பிரபுதேவாவோடு சோடி சேர்வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். நக்மா பிரபுதேவாவின் மீது ஆர்வமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் உலாவின. பிரபுதேவாவின் திருமணச் செய்தியை அறிந்த நக்மா மிகவும் பரபரப்பாக அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் விசாரித்துக் கொண்டிருந்ததாகவும் கதைகள் வந்தன.

பிரபுதேவவின் காதலுக்கு அவருடைய பெற்றோர் தரப்பில் பலத்த எதிர்ப்பு இருந்தது. பிரபுதேவாவின் திருமணத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ரம்லத்தை பிரபுதேவா திருமணம் செய்தார். புகழிலும், வசதியிலும் மிகவும் உச்சத்திற்கு சென்று விட்ட பிரபுதேவா, எந்தத் தடுமாற்றமும் இன்றி, தன்னுடைய காதலில் உறுதியாக நின்று, தான் காதலித்தவளை திருமணமும் செய்தார்.

இன்றைக்கு தன்னுடைய காதலில் உறுதியாக நிற்பது போன்று அன்றைக்கும் பிரபுதேவா உறுதியாக நின்றார்.

பிரபுதேவாவின் மீள் எழுச்சி

காதலன் படத்திற்கு பின்பு பிரபுதேவாவற்கு பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. அடுத்து வந்த படங்கள் மிகச் சுமாராக ஓடின அல்லது ஓடவில்லை. இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து, பின்பு கதாநாயகனின் தம்பியர்களில் ஒருவராக துணைப் பாத்திரங்களில் நடிக்கின்ற அளவிற்கு அவருடைய நிலைமை மாறிப் போனது.

ஆனாலும் நடிப்பைக் குறைத்துக் கொண்டு இயக்கத்தில் இறங்கினார். அவர் இயக்கிய முதலாவது தெலுங்குப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழில் இயக்கிய போக்கிரியும் வெற்றி பெற்றது. ஹிந்தியில் இயக்கிய “வாண்டட்” திரைப்படமும் வெற்றி பெற்றது.

இயக்கிய படங்களில் “வில்லு” போன்ற சில படங்கள் தோல்வியை தழுவினாலும் இன்றைக்கு பிரபுதேவா நம்பிக்கைக்கு உரிய ஒரு வெற்றி இயக்குனராகவே வலம் வருகிறார்.

காதல் பற்றிய கேள்விகள்

திரைத்துறை சார்ந்து பிரபுதேவா பற்றி பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருந்தாலும் அவருடைய காதல் விவகாரம் சர்ச்சையை கிளப்பும் விவகாரமாக போய்விட்டது.

ரம்லத் கொடுத்த கண்ணீர் பேட்டிகளும், வேலைவெட்டியில்லாத சில பெண்கள் சங்கங்களும் இந்து மக்கள் கட்சியும் கொடுத்த ஆர்ப்பாட்ட அறிக்கைகளும் பிரபுதேவாவை பற்றிய சர்ச்சைகளை ஊடகங்கள் மத்தியில் உருவாக்கி விட்டது.

பல சவால்களுக்கு மத்தியில் அன்றைக்கு காதலித்த பெண்ணை கரம் பிடித்த பிரபுதேவா இன்றைக்கு மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் தற்பொழுது காதலிக்கின்ற பெண்ணை கரம் பிடிப்பதில் தீவிரமாக இருக்கின்றார்.

“காதல்” என்பது என்ன? அது மகத்துவமானதா? அது ஒரு முறைதான் வருமா? பலமுறை வராதா? பலமுறை வந்தால் அந்தக் காதல்கள் பொய்யானதா? முதன்முறை வருகின்ற காதல் மட்டும்தான் உண்மையானதா? திருமணம் ஆன பின்பு காதல் வராதா? இப்படி பல கேள்விகளை கேட்பதற்கும், “காதலை” விசாரணணை செய்வதற்கு ஒரு வாய்ப்பை பிரபுதேவா விவகாரம் எமக்கு ஏற்படுத்தி தருகிறது.

எல்லாக் காதலும் காதலே

சில மாதங்களுக்கு முன்பு அயல் நாடு ஒன்றிற்கு ஒரு நிகழ்விற்காக சென்றிருந்தேன். எனக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் ஒருவரும் வந்திருந்தார். என்னுடன் மிகவும் வெளிப்படையாக பேசுகின்ற அளவிற்கு நெருக்கமானவர் அவர். ஐம்பதைக் கடந்தவர். அவருடைய பிள்ளைகள் திருமண வயதில் நிற்கிறார்கள்.

அடுத்த நாள் அவருடன் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். இல்லை, ஒரு முக்கியமான சந்திப்பு இருக்கிறது என்றார். தான் ஊரில் வாலிப வயதில் காதலித்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்றார். அந்தப் பெண்ணுக்கும் திருமணமாகி வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் அவர் தன்னுடைய காதலை கடைசி வரை சொல்லவே இல்லை.

அண்மையில் அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கு அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அப்பொழுதுதான் அந்தப் பெண் அந்த விடயத்தை சொன்னர். அந்தப் பெண்ணும் முன்பு அவரை காதலித்திருந்தாராம். அச்சம் காரணமாக சொல்லவில்லையாம். இவரும் தானும் காதலித்ததை சொல்லியிருக்கிறார்.

முகத்தில் பிரகாசம் தெரிய, கண்களில் ஆர்வம் மின்ன அடுத்த நாள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவருடைய குடும்பத்தையும் சந்திக்கப் போகிறேன் என்று சொன்னார்.

எனக்கு அவருடைய செய்கை ஆர்வத்தை தூண்டியது. காதல் பற்றி பேச்சு வந்தது. காதல் எப்பொழுதும் வரும் என்றார். திருமணத்திற்கு பின்பும் வேறொரு பெண் மீது காதல் நிச்சயமாக வரும் என்றார். எல்லாக் காதலும் காதலே என்றார்.

இவரைப் போன்று சிலரை சந்தித்திருக்கிறேன். தங்களின் குடும்பத்தை குலையாமல் பாதுகாத்துக் கொண்டே வெளியில் காதல் என்னும் உணர்வை பரவசமாக அனுபவித்தபடி இருப்பார்கள். இந்தக் கலை எல்லோருக்கும் கைவருவதில்லை.

என்னுடைய வேறு சில அவதானிப்புகளையும் சொல்ல வேண்டும். ஓரிரு நாளில் தொடர்கிறேன்……………

- வி.சபேசன் B.A.Pol.Sci

Posted in சமூகம், திரைப்பார்வை | Read More »

Comments

rana on 18 October, 2010 at 9:26 am #

what is this sabesan?“காதல்” என்பது என்ன? அது மகத்துவமானதா? அது ஒரு முறைதான் வருமா? பலமுறை வராதா? பலமுறை வந்தால் அந்தக் காதல்கள் பொய்யானதா? முதன்முறை வருகின்ற காதல் மட்டும்தான் உண்மையானதா? திருமணம் ஆன பின்பு காதல் வராதா?w8ing 4 the answer


Kumran on 19 October, 2010 at 10:42 pm #

அப்படி போடுங்க..நல்லதோ கெட்டதோ நாலு விடயம் உங்களிட்டேயிருந்து வரட்டும்..


anand chelliah on 24 November, 2010 at 10:06 am #

இப்போ என்ன சொல்ல வர்றீங்க? மனுஷங்களுக்கு எப்போ வேணாலும் வரக்கூடிய காதல் இப்போ பிரபுதேவாவுக்கு வந்துடுச்சு, ரம்லத் வாயை மூடிக்கிட்ட்டு வழியை விடணும்ன்னா? இங்குள்ள பத்திரிகைகள் பிரபு தேவா-
நயன்தாரா காதலைச் சர்ச்சை செய்திகளா வெளியிடுற சாக்குல இன்னொரு வேலையை சைலண்ட்டா பண்ணிச்சு. பிரபு தேவாவும் நயன்தாராவும் உலகத்துலயே அற்புதமான ஜோடி, ரம்லத் நயன் தாராகிட்டருந்து நிறைய பணமும் நகையும் வாங்கிட்டு, இப்போ கலாட்டா பண்றாருங்கிற மாதிரியான தோற்றத்தை உருவாக்கிட்டாங்க. ஒரு பத்திரிகை படி மேலயே போய், பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் சிறந்த ஜோடி அவார்டு கொடுத்து பெருமைப்பட்டுக்கிட்டாங்க. (நயன்தாராவால் அந்தப் பத்திரிகைக்கு என்ன ஆக வேண்டியிருக்கோ?) அவங்க மறைமுகமா செஞ்ச வேலையை நீங்க காதல், எழுத்தாளர், மரபுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை, யதார்த்தம்ன்னெல்லாம் பேசி செய்றீங்க. பிரபுதேவாவுக்கு எத்தனை முறை வேணும்னெல்லாம் காதல் வரலாம். ஆனா நேத்து காதலிச்சி, இன்னைக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லாம தன்னையே நம்பி இருக்குற ஒரு பொண்ணுக்குத் துரோகம் பண்ணி அடுத்த காதலை அடையக் கூடாது. இங்கே பலருக்குக் கல்யாணத்துக்குப் பிறகும் நிறைய காதல்கள் வரத்தான் செய்யுது. ஆனா தற்போதைய உறவை முறிக்குறதுக்கான காரணம் அவங்களுக்கு இல்லை. அந்த உறவை கண்ணீர் வடிக்க வச்சு, ஏமாத்தி, துரத்திவிட்டு அடுத்த உறவை ஏத்துக்க தயாரா இல்லை. சிலர் மனைவிக்குத் தெரியாம புது காதலை கண்டினியூ பண்றாங்க. அன்போ, பிரியமோ, காதலோ இன்னொருத்தருக்குத் துரோகம் பண்ணாம அதைச் செய்ய முடியுமா? பெரும்பாலும் முடியாது. அதனால்தான் வாழ்க்கையில் வந்துட்டே இருக்குற காதல் பலருக்கு வர்றது இல்லை. சிலர் காதலை விட, செய்ய வேண்டிய கடமைகளும் வேலைகளும் முக்கியம்னு நினைக்குறாங்க. பிரபு தேவா, நயன் தாரா காதலுக்கு வக்காலத்து வாங்குங்க. அதோட ரம்லத்துக்கு ஒரு நியாயமும் சொல்லுங்க.


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99