அடே, நீ தமிழனாவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

அரசியல் கட்டுரை ஒன்றை எழுதுகின்ற திட்டத்தில் இருந்தேன். ஆனால் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் என்னை இதை எழுத வைத்து விட்டது.

அண்மையில் அங்கே நடந்த நகராட்சித் தேர்தலை ஒட்டி ஒரு அருவருக்கத்தக்க விளம்பரத்தை அந்த வானொலி ஒலிபரப்பியது. ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் தமிழர்கள் சிலர் கட்டணம் செலுத்தி அந்த விளம்பரத்தை வானொலியில் ஒலிபரப்பச் செய்தார்கள்.

பொறுப்போடு நடந்த கொள்ள வேண்டிய அந்த தமிழ் வானொலி பொறுப்பற்றத்தனமாகவும் அறிவுகெட்டத்தனமாகவும் நடந்து அந்த விளம்பரத்தை ஒலிபரப்பியது.

இருவர் பேசுவது மாதிரி உருவாக்கப்பட்டிருந்த விளம்பரம் இதுதான். ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்கிறார், “மேயர் எலக்ஸனில் உங்களுடைய ஓட்டு யாருக்கு?”. அதற்கு மற்றவர் சொல்கிற பதில் இதுதான், “என்ன கேள்வி, நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம் கலாச்சாரம் இருக்கிறது, ரோப் பேட்டை பாருங்கள், அவருடைய மனைவி ஒரு பெண்…” இப்படிப் போகிறது அவருடைய பதில். ரோப் பேட் என்பவருக்குத்தான் தன்னுடைய வாக்கு என்று விளம்பரம் முடிகிறது.

அதாவது அவர் ஒரு தமிழராம். அவரிடம் சமயம் கலாச்சாரம் எல்லாம் இருக்கிறதாம். அதனால் ஒரு ஆணுடன் வாழ்கின்ற ஜோர்ஜ் ஸ்மிர்தமன்னுக்கு வாக்கைப் போடாமல் ஒரு பெண்ணுடன் வாழ்கின்ற ரோப் பேட்டுக்கு வாக்கு போடப் போகிறாராம்.

இப்படி ஒரு அருவருப்பானதும் முட்டாள்தனமானதுமான விளம்பரத்தை இந்த வானொலி ஒலிபரப்பியது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு செயல் இது.

இது விளம்பரதாரரும் வானொலியும் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொல்லி யாரும் தப்பிக் கொள்ள முடியாது. இந்த விளம்பரம் புலம்பெயர் தமிழர்களைப் பற்றி சில செய்திகளை சொல்கிறது.

  • மேயர் தேர்தலில் வேட்பாளர் தன்பால் மீது நாட்டம் கொண்டவரா அல்லது எதிர்பால் மீது நாட்டம் கொண்டவாரா என்பதில் தமிழர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்
  • அதை வைத்து வாக்கை போடுகின்ற அளவிற்கு தமிழர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்
  • ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்கின்ற விளம்பரங்களை வெளியிடுவதை அனுமதிக்கின்ற நிலையில் தமிழ் சமூகம் இருக்கிறது

இதில் மூன்றாவது விடயம் முக்கியமானது. தமிழர்களில் யாரோ சிலருக்கு அவர்களின் அறியாமை காரணமாக ஒரு வேட்பாளரின் ஓரினச்சேர்க்கையை வைத்;து கிண்டல் செய்கின்ற எண்ணம் வந்திருந்தால் அதை பெரிதுபடுத்தாது விடலாம். வேண்டும் என்றால் அவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றி சொல்லி புரிய வைக்கலாம்.

ஆனால் அவர்கள் அதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்குகிறார்கள். கனேடியத் தமிழர்களின் முக்கிய வானொலி ஒன்று அதை கட்டணம் பெற்றுக் கொண்டு ஒலிபரப்புச் செய்கிறது. அந்த விளம்பரம் ஓரினச்சேர்க்கையாளர்களை அவமதிக்கிறது என்பது கூட அந்த வானொலியில் உள்ளவர்களுக்குப் புரியவில்லை.

விளம்பரத்தை உருவாக்கியவர்களும் வானொலியைச் சேர்ந்தவர்களும்தான் அறிவு கெட்டு நடந்தார்கள் என்றால், வானொலியை கேட்பவர்களுக்கு அறிவு எங்கே போனது? கனேடியத் தமிழர்களிடம் இருந்து இந்த விளம்பரத்திற்கு குறிப்பிடும்படியான எதிர்ப்புகள் வரவில்லை.

காரணம் இந்த விளம்பரத்தின் உள்ளடக்கத்தை ஆதரிப்பவர்களைத்தான் தமிழ் சமூகம் பெரும்பான்மையாக கொண்டிருக்கிறது. அந்தத் துணிவிலேயே இப்படியான விளம்பரத்தை வெளியிட்டு விட்டு எதுவும் நடக்காதது போன்று அந்த வானொலியாலும் இருக்க முடிகிறது.

ஒரு அநீதியை எதிர்க்காதவர்களும் அதற்கு துணை போனவர்களாகவே கருதப்படுவார்கள் என்று சொல்வார்கள். இந்த விளம்பரம் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட ஒரு குற்றம். இதைக் கண்டித்தே ஆக வேண்டும்.

இங்கே ஓரினச் சேர்க்கை பற்றி சில விடயங்களை சொல்ல வேண்டும். ஓரினச்சேர்க்கை என்பது குற்றமோ, பாவமோ இல்லை. ஒரு காலத்தில் ஓரினச் சேர்க்கையை ஒரு உளவியல் பிரச்சனையாக வரையறுத்த அறிவியல் இன்றைக்கு அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டது.

எப்படி பல ஆண்களுக்கு பெண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில ஆண்களுக்கு ஆண்கள் மீது நாட்டம். எப்படி பல பெண்களுக்கு ஆண்கள் மீது நாட்டமோ அதே போன்று சில பெண்களுக்கு பெண்கள் மீது நாட்டம். இதைப் போன்றே இரு பாலிலும் நாட்டம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

வலது கையால் எழுதுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக இடது கையால் எழுதுபவர்கள் ஒன்றும் ஊனமானவர்களோ அசாதரணமானவர்களோ இல்லை. அதே போன்று எதிர்பாலின் மீது நாட்டம் கொள்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக தன்பால் மீது நாட்டம் உள்ளவர்களை அசாதரணமானவர்களாவும் குற்றவாளிகளாகவும் பார்ப்பது மிகத் தவறான ஒன்றாகும்.

எனக்கு ஒரு ஆணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக இருக்கிறது. அவனுக்கு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது உவப்பற்றதாக தெரிகிறது. ஆனால் என்னுடைய விருப்பத்தை அவன் புரிந்து கொள்வது போன்று, அவனுடைய விருப்பத்தை நானும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இதை வைத்து அவனை கிண்டல் செய்வதோ, அவனைப் போன்றவர்களை அவமதிப்பதோ மனிதகுலத்திற்கு விரோதமாக அமையும்.

இங்கே ஒரு சிறுபான்மைச் சமூகத்தை கிண்டல் செய்து அவமதிக்கின்ற விளம்பரத்தை வெளியிட்ட வானொலி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதே சரியானது. இந்த விளம்பரம் கனடாவின் பல ஊடகங்களில் கண்டனத்தை பெற்று வருகின்றது. இது ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு பாதகமானதாகவே இருக்கும்.

இந்த விளம்பரத்தில் இன்னும் ஒரு அறியாமையும் வெளிப்பட்டு நிற்கிறது. விளம்பரத்தில் ஒரு வசனம். “நான் தமிழனடா, எங்களுக்கு ஒரு சமயம், கலாச்சாரம் என்று இருக்கிறது”, இப்படி ஒருவர் சொல்கிறார்.

அடே, நீ தமிழனாகவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!

இது என்னுடைய மிகப் பணிவான பண்பான கேள்விகள். பணிவும் பண்பும் இல்லையென்றால் இதிலே வேறு சொற்கள் இருந்திருக்கக் கூடும்.

வட இந்தியன் போன்று ஆடைகள் உடுத்தி, ஆரிய விழாக்களை கொண்டாடி, ஆரிய மொழியில் நிகழ்வுகளை செய்கின்ற உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? உடல் உறுப்புகள் எந்தப் பாகத்தில் சேர்கின்றன என்பதற்குள்ளே அடங்கிவிடக்கூடிய ஒன்றா உன்னுடைய கலாச்சாரம்?

அட, கலாச்சாரத்தை விடுங்கள். சமயத்தை கொண்டு வந்தான் பாருங்கள், புல்லரித்து விட்டது.

சமயம் என்ன சொல்கிறது?

தேர்தலிலே போட்டியிட்ட ரெப் பேட்டும் ஜோர்ஜ் ஸ்மிர்தனும் சாந்திருக்கின்ற கிறிஸ்தவ சமயமே ஓரினச் சேர்க்கையை தடை செய்கிறது. ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதை பாவம் என்று சொல்கிறது. அதற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற கன்னியாஸ்திரிகள், பாதிரிமார்கள் இல்லையா என்று இங்கே முட்டாள்தனமாக கேட்க வேண்டாம். இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மதம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் இங்கே சொல்லப்படுகின்ற விடயம்.

ஆனால் இந்த விளம்பரத்தை வெளியிட்டவர்கள் பின்பற்றுகின்ற சமயம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்கிறது என்பதுதான் இங்கே முரண்நகையாக நிற்கிறது.

இந்து மதத்தின் வேதங்கள் ஓரினச் சேர்க்கை பற்றி பேசுகின்றன. புராணங்கள் ஆண் கடவுள்கள் உறவு கொண்ட கதைகளை சொல்கின்றன. எங்குமே இந்த ஓரினச் சேர்க்கைய கண்டித்தோ, அதைப் பாவம் என்றோ சொல்லப்படவில்லை.

சிவனும் விஸ்ணுவும் உறவு கொண்டு ஐயப்பனைப் பெற்றார்களாம். நாரதரும் விஸ்ணுவும் உறவு கொண்டு அறுபது குழுந்தைகளை பெற்றெடுத்தார்களாம். எத்தனையோ கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஓரினச் சேர்க்கையை சொல்லி நிற்கின்றன.

சைவ சமயத்திலும் மாணிக்கவாசகர் தன்னை பெண்ணாகப் பாவித்து சிவனை தன்னுடைய காதலனாக கற்பனை செய்து பல பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றை சிற்றின்பமாக பார்க்காமல் பேரின்பமாக பார்க்கச் சொல்லி சிலர் சமாளித்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் ஓரினச் சேர்க்கை தமிழ் சமூகத்தில் புரிந்து கொள்ளப்படுகின்ற காலத்தில் மாணிக்கவாசகரின் பாடல்கள் புதிய அர்த்தங்கள் பெற்று நிற்பதை யாராலும் தடுக்க முடியாது போகும்.

இந்து சமயம் ஓரினச் சேர்க்கையை பாவமாகவோ குற்றமாகவோ பார்க்கவில்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே இந்த விளம்பரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படி எந்த வகையில் பார்த்தாலும் குறிப்பிட்ட விளம்பரம் முட்டாள்தனத்தின் உச்சக் கட்டமாகத்தான் நிற்கிறது. தமிழர்களை முட்டாள்களாகவும் மனிதகுல விரோதிகளாகவும் சித்தரிக்கின்ற விளம்பரங்களை வெளியிடாது கவனித்துக் கொள்கின்ற கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.

ஒரு இனத்தின் ஊடகங்களே அந்த இனத்தை பிரதிபலிக்கின்ற கண்ணாடிகள் என்பதை ஊடகங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

Posted in சமூகம் | Read More »

Comments

Busch on 29 October, 2010 at 4:33 pm #

An understandable and acceptable article. If this article can be translated and published in any local newspaper in Canada, then I believe that, may be it could be a strong reaction to that incident. Not only that, the Canedians including the tamils(some of them) living in Canada will be educated properly about the Tamilculture.


Sabesan - Australia on 31 October, 2010 at 11:58 pm #

Vaalthukal - Mikka mahilchi - Thodarnthu eluthungal

Sabesan - Australia


மனோகரன் on 1 November, 2010 at 5:21 pm #

கனேடியத் தமிழர்கள் இந்த விளம்பரத் எதிர்க்கவில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது பிழை. பலர் எதிர்த்ததன் காரணமாக விளம்பரத்தை வானொலி இரண்டு மணித்தியாலங்களின் பின்பு ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டது.


Siva Somasuntharam on 6 February, 2011 at 3:57 pm #

சகோதரர் சபேசன் அவர்கள் திரும்பவும் எழுதத்தொடங்கியதற்கு முதலில் வாழ்த்துகள் கூறியாக வேண்டும். நம் சமூகம் சார்ந்த,மூட நம்பிக்கை, பகுத்தறிவின்பால் சிந்தியாமை தொடர்பான தங்கள் சீற்றம் அதன்பால் தங்களிடமிருந்து வரும் கருத்துக்கள் காத்திரம் மிக்கதாக உள்ளன. நன்றி


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99