“பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.

பகுத்தறிவாளனாக சிந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும் மிகவும் இலகுவானவை. ஆனால் பகுத்தறிவாளனாக வாழ்வது மிகவும் கடினமானது. நிர்வாணமாக நிற்பவர்களுக்கு மத்தியில் ஆடை அணிந்திருப்பவன் போன்ற நிலைமை அது. சில நேரங்களில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாமும் நிர்வாணமாக நின்று தொலைக்க வேண்டிய தருணங்களும் வரும்.

அப்படி நிற்க வேண்டி வருகின்ற தருணங்களில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. இதில் இருந்து எல்லோராலும் தப்பிக்க முடிவது இல்லை.

திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது. அதுவும் காதலித்து, பெற்றோரின் விருப்பத்தை மீறி, திருமணம் செய்கின்ற பொழுது மட்டும்தான் அது இருவர் சம்பந்தப்பட்டது. பேச்சுத் திருமணம் என்றாலோ, பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணம் என்றாலோ அது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஆகி விடுகின்றது.

இதில் மணமக்களில் ஒருவர் மட்டும் பகுத்தறிவுச் சிந்தனையோடு இருந்தால் அவருடைய பாடு திண்டாட்டமாகி விடும். இருவர் மட்டும் சம்பந்தப்பட்டுள்ள காதல் திருமணத்தில் மற்றவரை தெளிவுபடுத்தியோ, சமாதானப்படுத்தியோ, சமரசங்களைச் செய்தோ பகுத்தறிவுத் திருமணத்தற்கு சம்மதிக்கச் செய்து விடலாம்.

பேச்சுத் திருமணங்களிலும், பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணங்களிலும்தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது. அங்கே தனித்து நின்று பகுத்தறிவு பேசுகின்ற மணமகனின் குரலோ மணமகளின் குரலோ எடுபடாமல் போய் விடுகிறது.

பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணத்தில் வேறொரு பிரச்சனையும் பகுத்தறிவாளனுக்கு வந்து சேரும். காதலை ஏற்றுக்கொண்டு நல்ல மனதோடு நடந்து கொண்ட பெற்றோர்களின் விருப்பப்படி திருமண நிகழ்வை நடத்தி கைமாறு செய்ய வேண்டிய நிலைக்கு பகுத்தறிவாளன் தள்ளப்படுகின்ற சங்கடமான நிலைமை முன்னே வந்து நிற்கும்.

என்னுடைய திருமணம்

நான் காதல் திருமணம் செய்தவன். சில விடயங்களில் சமரசம் செய்து கொள்ளாத என்னுடைய உறுதி பற்றி பெற்றோர் தரப்பிற்கு தெரிந்திருந்ததால் அவர்கள் எதிலும் தலையிடவில்லை.

திருமண அழைப்பிதழிலும் “பெற்றோர்கள் நிச்சயித்திருப்பதால்”, “சுப முகூர்த்தத்தில்” போன்ற பொய்கள் இடம்பெறவில்லை.

எப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று நானே எழுதிக் கொடுத்தேன். அதில் இருந்தபடி பெற்றோர் தரப்பினர் புரிந்துணர்வோடு நடந்து கொண்டார்கள். எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

ஆனால் பார்வையாளர்களுக்கு “தமிழ் நெறித் திருமணத்தை” பரப்புகின்ற நோக்கம் எனக்கு முக்கியமாக இருந்ததனால், அந்த இடங்களில் நான் சில சமரசங்களை செய்து கொண்டேன். திருமணம் நடைபெறுகின்ற உணர்வை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் என்னால் தாலியை தவிர்க்க முடியாமல் இருந்தது.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் இந்த திருமண முறையை பின்பற்றுகின்ற சிந்தனையைப் பெற வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு பொருத்தமான தேவாரங்களையும் ஓதச் செய்தேன்.

(இதைப் பற்றிய மேலதிக விடயம் இந்தப் பேட்டியில் இருக்கிறது)

ஆனால் இவைகளுக்காக நான் என்னுடன்தான் வாதாட வேண்டி இருந்தது. போராட வேண்டி இருந்தது. வாதாடிப் போராடி ஒரு தெளிவான முடிவுக்கு வந்தேன். எந்த சஞ்சலமும் இன்றி மகிழ்ச்சியோடு என்ன செய்கிறேன், ஏன் செய்கிறேன் என்கின்ற தெளிவோடு என்னுடைய திருணமத்தை செய்தேன்.

என் நண்பனின் திருமணம்

என்னைப் போலவே அவனும் ஒரு பகுத்தறிவாளன். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. என்னை விட அவன் தீவிரமானவன். சமூகத்தின் மீது மிகுந்த கோபத்தோடு பகுத்தறிவுக் கருத்துகளை பேசுவான்.

அவனுடைய திருமணம் பேச்சுத் திருமணமாக அமைந்து விட்டது. திருமணம் நடப்பது உறுதியாகி, நிச்சயிக்கப்பட்டவளோடு தொடர்ந்து பேசியதில் அங்கே காதலும் அரும்பி விட்டது.

ஒரு புரோகிதர் இல்லாது, தமிழில் மந்திரங்களை சொல்லி, திருமணம் செய்வதற்கு குடும்பத்தினரிடம் அனுமதி பெறுவதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கிவிட்டது. முதலில் அவனுக்கு துணையாகப் போகின்ற மணப்பெண்தான் சம்மதித்தார். அவனுடைய விளக்கங்களைக் கேட்டு முழுமனதுடனேயே அவர் சம்மதித்தார்.

ஆனால் பெற்றோர்கள் புரோகிதர் இல்லாமல், சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதற்கு மிகவும் தயங்கினார்கள். நீண்ட விவாதங்களின் பின்பு புரோகிதரும், சமஸ்கிருத மந்திரங்களும் இல்லாமல், ஆனால் மற்றைய சடங்குகள் இருப்பது போன்ற ஒரு முறைக்கு சம்மதித்தார்கள்.

கடைசியில் இந்தத் திருமணம் ஒரு இரண்டுங் கெட்டான் திருமணமாக நடந்து முடிந்தது. பார்ப்பான் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சூத்திரன் அமர்ந்து கொண்டான். சூத்திரன் கடவுளின் மொழியான சமஸ்கிருதத்தை கற்பதோ, ஓதுவதோ பாவம் என்பதனால் சமஸ்கிருதம் அங்கே ஒலிக்கவில்லை. மற்றையபடி அனைத்து மூடச் சடங்குகளும் நடந்து முடிந்தன.

திருமணம் நடந்த முறை பற்றி பகுத்தறிவுச் சிந்தனையுள்ள என்னுடைய நண்பனும் திருப்தி அடையவில்லை. மணமக்களின் பெற்றோரும் முழுமையான மகிழ்ச்சி அடையவில்லை.

இன்னொரு தமிழ்நெறித் திருமணமும் என்னுடைய நிபந்தனையும்

இந்தத் திருமணம் நடந்து சில மாதங்களின் பின்பு ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து “தமிழ்நெறித் திருமணம்” ஒன்றை நடத்தித் தரும்படி எனக்கு அழைப்பு வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறுகின்ற ஒரு திருமணம் அது.

நான் ஒரு விடயத்தை தெளிவாகச் சொன்னேன். “பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.

திருமணம் என்பது இனிமையாக மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒரு நிகழ்வு என்பது என்னுடைய கருத்து. பகுத்தறிவுச் சிந்தனையுள்ள மணமக்கள் தரப்போ, மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் தரப்போ, ஆகக் குறைந்தது ஒரு தரப்பாவது திருமணம் நடந்த முறை பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும். இரு தரப்புமே அதிருப்தியோடு திருமணத்தை நடத்துவது என்பது சரியானது அல்ல. அது பகுத்தறிவும் அல்ல.

பெற்றோர்களின் முற்று முழுதான ஆதரவோடு அந்தத் தமிழ்நெறித் திருமணத்தை நானும் பலரும் அறிந்த ரவி அருணாச்சலாம் அவர்களும் இணைந்து நடத்திக் கொடுத்தோம்.

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்பது பலரும் நினைப்பது போன்று, எழுதப்பட்டிருக்கும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல. காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்றபடி ஒழுங்குகளை அமைக்க கோருவதுதான் பகுத்தறிவு.

பகுத்தறிவாளனுக்கு எந்தச் சட்டங்களும் இல்லை. இன்றைக்கு சரி என்பதை நாளைக்கு பிழை என்று சொல்வான். இன்றைக்கு பிழை என்று சொன்னதை நாளைக்கு சரி என்று சொல்வான். அனைத்திற்குமே அவனிடம் நியாயமான காரணங்கள் இருக்கும். தந்தை பெரியார் சொன்னதையும் அவன் காரணத்தோடு மறுத்துச் சொல்வான்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எழுதி வைத்ததை கட்டிப்பிடித்துக் கொண்டு திரிய மாட்டான். பூணூல் கட்டியிருப்பதனாலேயே அவன் சொல்வது எல்லாம் சரி என்று நம்பிக் கொண்டு வாழ மாட்டான். என்ன செய்தாலும், ஏன், எதற்கு என்று தெரிந்து கொண்டு செய்வான்.

ஒரு செயல் ஒரு இடத்தில் அவனுக்கு மூடநம்பிக்கையாக தெரியும், அதே செயல் இன்னொரு இடத்தில் அவனுக்கு பகுத்தறிவாக இருக்கும்.

கணவனை இழந்த பெண்ணிற்கு அத்துடன் வாழ்க்கை முடிந்தது என்று சொல்லி சமூகத்தின் சொல்லைக் கேட்டு அந்தப் பெண் தாலியை கழற்றினால் அது மூட நம்பிக்கையாக இருக்கிறது. பொருந்தாக் கணவன் வேண்டாம் என்று சமூகத்தை எதிர்த்து இன்னொரு பெண் தாலியைக் கழற்றினால் அது பகுத்தறிவுச் சிந்தனையாக இருக்கிறது.

கடவுள் என்று ஒரு சிலையை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. அந்தச் சிலைக்கு மக்களின் மொழியில் வழிபாடு செய் என்பது பகுத்தறிவு மிக்க போராட்டமாக இருக்கிறது.

இப்படி பகுத்தறிவு என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. உடைக்க முடியாத விதிகளையும் சட்டங்களையும் செய்து பின்பற்றுவதற்கு பகுத்தறிவு என்பது ஒரு மதமும் இல்லை, அதன் கடவுள் தந்தை பெரியாரும் இல்லை.

இதை உணராத சில மூடர்கள் ஏன் அப்படிச் செய்தாய், ஏன் இப்படிச் செய்தாய் என்று பகுத்தறிவாளர்களை விசாரணை செய்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். என்னுடைய துணைவியை புரோகிதத் திருமணத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற நிலை எனக்கு ஏற்பட்டிருந்தால், அந்த புரோகிதத் திருமணத்தை செய்து என்னவளை அடைந்திருப்பேன். என்னை மிகவும் நேசிக்கின்ற எனக்கு மிகவும் பொருத்தமான என் துணைவியை அடைவதுதான் பகுத்தறிவே தவிர, தமிழ்நெறித் திருமணம் செய்வதற்காக அவளை இழப்பது அல்ல.

- வி.சபேசன் B.A.Pol.Sci

 

Posted in சமூகம், பகுத்தறிவு | Read More »

Comments

ponnakk on 2 November, 2010 at 10:38 am #

பகுத்தறிவு என்றால் என்ன?

nalla vilakkam…நல்ல விளக்கம்.. காலக்கட்டத்திற்க்கு, சூழ்நிலைக்கு தகுந்தால்போல நடப்பதற்க்கு சிந்தனைதிறமையும் புத்திசாலித்தனமும் வேண்டும்..ஏன் என்று கன்வின்ஸ் பண்ணும் திறமையும் வேண்டும். பொதுவாக சமுதாயத்தில் கீல்மட்டத்தில் இருக்கும் சமுகத்தினரிடையே மற்ற உயர்ந்த சமுகத்தில் நடக்கும் புரோகிதர்கள் முறை கிடையது…யார் வருவார்கள்..ஆனால் இன்று சிட்டிகளில் அவர்களிடையேயும் பின்பற்றப்படுவதுதான் ஆச்சர்யம்..ஏன் நாங்களும் மற்றவர்களிடையிருந்து பிந்தங்கிவிடவில்லை என்பதற்க்கா…என்னப்பண்ணீணாலும் சமத்துவம் வரப்போவதில்லை.எல்லாம் வேசம்தான்.]
என்னை மிகவும் நேசிக்கின்ற எனக்கு மிகவும் பொருத்தமான என் துணைவியை அடைவதுதான் பகுத்தறிவே தவிர, தமிழ்நெறித் திருமணம் செய்வதற்காக அவளை இழப்பது அல்ல.

ஆம் வாழ்க்கை வாழ்வதற்க்கே…இலப்பதற்க்கல்ல..

ஒரு செயல் ஒரு இடத்தில் அவனுக்கு மூடநம்பிக்கையாக தெரியும், அதே செயல் இன்னொரு இடத்தில் அவனுக்கு பகுத்தறிவாக இருக்கும்
பொருந்தாக் கணவன் வேண்டாம் என்று சமூகத்தை எதிர்த்து இன்னொரு பெண் தாலியைக் கழற்றினால் அது பகுத்தறிவுச் சிந்தனையாக இருக்கிறது.
உடைக்க முடியாத விதிகளையும் சட்டங்களையும் செய்து பின்பற்றுவதற்கு பகுத்தறிவு என்பது ஒரு மதமும் இல்லை, அதன் கடவுள் தந்தை பெரியாரும் இல்லை.

நன்று.


அருள் on 2 November, 2010 at 2:22 pm #

பகுத்தறிவு பற்றி மிகச் சிறப்பான விளக்கம். சில மரமண்டைகளுக்கு புரிந்தால் சரி


Selvaraj on 2 November, 2010 at 6:11 pm #

பேச்சுத் திருமணமே பகுத்தறிவுக்கு எதிரானது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


webeelam on 2 November, 2010 at 10:01 pm #

Ponnak, அருள், செல்வராஜ்

உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள்.

செல்வராஜின் கேள்வி நியாயமானது. இந்தக் கட்டுரையின் அடுத்த பாகத்தில் என்னுடைய கருத்தை கூறுகிறேன்.


rana on 7 November, 2010 at 11:05 am #

சபேசன் அண்ணா,இங்கே பலர் கருணாநிதி மீது ஏக கடுப்பில் இருக்கிறார்கள் ,உங்கள் ஒருவரைத்தவிர மற்ற எல்லோரும் அவரை விமர்சித்தாகிவிட்டது ,உங்களின் தயக்கத்துக்கு தகுந்த காரணம் உண்டு என்று நம்புபவன் நான்,தயவு செய்து கலைஞ்ர் கருணாநிதியை இன்னும் விமர்சிப்பவர்களுக்கு ஒரு கட்டுரை எழுதவும் ,அதை தமிழ் பதிவுலகில் உங்களால் மட்டுமே எழுத முடியும் ,விரைவில் எழுதவும்


k.pathi on 9 November, 2010 at 3:50 am #

Dear Mr.Rana! i am wondering to note still people like u enchanted by karuna!:
People like me trusted him all along:Just tell me: who has cheated whom?
The world order has changed…
u have liberty to praise karunanidhi:But people like me will never forget the “support” given by him to Itali girls!


rana on 13 November, 2010 at 4:14 pm #

hello,mr pathi,i still have lot of questions on mr Karunanithi.but still i am supporting him,but mr Sabesan only can write an article regarding this.if he is not willing to write an article, let him tell out,after that i will write


Meikandan on 25 November, 2010 at 8:20 pm #

I understand Karunanithy’s predicament. He needs his party to be in power. If he was openly against congress’s ignorance of tamil people’s killings by Rajapakse and broke away from them, Jayalalitha would have sided with congress and hurt his ‘politics’. Also, for Karunanithy and his family, maintaining their financial empire was paramount. For that to happen, they had to be in good terms with congress.

However, no one can defend Karunanithy’s dirty tongue lashing about LTTE - TELO fights of the past while tamil people were being butchered by Rajapakse. Karunanithy did not behave like a senior statesman and a true ‘DMK’ stalwart to defend tamils.

I may be wrong, but in my opinion, Karunanithy has virtually destroyed the good principles of the original DMK by giving prominence to his family politics and money.

If Karunanithy wants to do ‘pariharam’ for his inactivity, he can still do certain good things. May be he should put more realistic pressure on congress than playing ‘acting’ games such as ‘Karunanithy’s letters to Manmohan Singh’ and his famous ‘4 hours hunger strike for eelam tamils’.

No wonder, Sarath Fonseka called him a real ‘joker’.


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99