எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

நவம்பர் மாதம் வந்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் “நாடு கடந்த அரசு” மாவீரர் நாள் நிகழ்வுகளை பொறுப்பெடுத்து நடத்தியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கான முனைப்புகளில் நாடு கடந்த அரசு ஈடுபடுவதாக தெரியவில்லை.

தமிழர்களின் மிக முக்கியமான நிகழ்வு ஒன்றில் நாடு கடந்த அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது. ஆனால் நாடு கடந்த அரசு எல்லோரையும் அனுசரித்துப் போக விரும்புகிறது. இந்த அணுகு முறை பயன்தராது என்பதை நாடு கடந்த அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும்.

இந்த விடயம் பற்றிப் பின்பு பார்ப்போம். இப்பொழுது இந்தக் கட்டுரையின் தலைப்பு பேசுகின்ற மிக முக்கியமான விடயத்திற்கு வருவோம்.

தேசியத் தலைவரை விட்டு விட்டு எமது போராட்டம் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

தேசியத் தலைவர் வீரச் சாவு அடைந்தார் என்கின்ற உண்மையை தமிழினம் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்குப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும். தமிழினம் தேசியத் தலைவரின் பெயரில் ஒற்றுமையாக நின்று சிறிலங்கா அரசுக்கு சவால் விட்டிருக்கும்.

குழப்பத்திற்கு சிறிலங்கா அரசே காரணம்

தேசியத் தலைவர் பற்றிய குழப்பத்தை சிறிலங்கா அரசே உருவாக்கியது. இந்தக் குழப்பம் இன்று வரை தீர்ந்து விடாமல் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் மே 18ஆம் திகதி தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று சிறிலங்கா அரசு கூறியது. பின்பு மே 19ஆம் திகதி கொல்லப்பட்டதாகக் கூறி அவரின் உடலைக் காட்டியது. தொழில் நுட்பம் குறைந்த கமெராவினால் எடுக்கப்பட்ட காட்சிகளை முதலில் வெளியிட்டது. இதிலானேயே பெரும் குழப்பம் தமிழர்களிடம் உருவானது. பின்பு வெளியிடப்பட்ட மிகத் தெளிவான காட்சிகளும் புகைப்படங்களும் இந்தக் குழப்பத்தை முற்று முழுதாக தீர்க்கவில்லை.

இருக்கிறார் என்றும் இல்லை என்றும் இரு தரப்பு தமிழர்களிடம் உருவாகி விட்டது.

தேசியத் தலைவருக்கு எதிரான வழக்குகள் இலங்கை, இந்திய நீதிமன்றங்களில் இருந்து நீக்கப்பட்ட்டன. ஆனால் இறப்புச் சான்றிதழை சிறிலங்கா அரசு இன்று வரை உத்தியோகபூர்வமாக இந்தியாவிடம் வழங்கவில்லை.

இப்படி திட்டமிட்டு குழப்பங்களை உருவாக்கி தமிழர்களை பிளவுபடுத்தி போராட்டத்தை ஒட்டு மொத்தமாக சிறிலங்கா அரசு முடக்கிப் போட்டிருக்கிறது.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்று வாதிடுவதற்கு அடிப்படையாக சிறிலங்கா அரசு தருகின்ற ஆதாரங்களே இருக்கின்றன. தேசியத் தலைவர் இருக்கிறார் என்று சொல்வதற்கும் சிறிலங்கா அரசு தருகின்ற ஆதாரங்களே காரணமாக இருக்கின்றன. இப்படி இரண்டு வாதங்களின் அடித்தளமும் சிறிலங்கா அரசிடமே இருக்கின்றன.

இவற்றை தாண்டி எம்மிடம் எதுவுமே இல்லை. ஆகவே சிறிலங்கா அரசு தான் நினைத்தபடி தமிழர்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆயினும் பெரும்பாலான தமிழர்கள் மெது மெதுவாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அந்த உண்மை தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதே. ஒரு சில மோசடிப் பேர்வழிகள் தமது சுயநலன்களுக்காக தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பல தமிழர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் மாவீரர் நாளில் தேசியத் தலைவர் நினைவுகூரப்பட்டு அவருக்கு அக வணக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற சிந்தனை குறிப்பிட்டளவிலான தமிழர்களிடம் இருக்கின்றது.

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம்

உண்மையில் கடந்த ஆண்டு மாவீரர் நாளிலேயே தேசியத் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிக நீண்ட விவாதங்களிற்குப் பிறகு அனைத்து வெளிநாட்டுக் கட்டமைப்புகளும் இதற்கு இணங்கியிருந்தன.

தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்கின்ற உண்மை அனைத்து வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பாளர்களுக்கும் தெரியும். தேசியத் தலைவரின் வீரச் சாவினை அடுத்து வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்புகளில் இருந்த பலர் கதறி அழுதார்கள். சிலர் தமது சக பொறுப்பாளர்களின் முன்பு அழுதார்கள். சிலர் தனி அறையில் அழுதார்கள்.

ஆனால் தேசியத் தலைவரை நேசித்த மக்களிற்கு மட்டும் அழுவதற்கான உரிமையை மறுத்தார்கள்.

ஆயினும் கேபி போன்றவர்களின் அழுத்தங்கள் காரணமாக மக்களிடம் உண்மையை சொல்லி மாவீரர் தினத்தில் தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒத்துக் கொண்டார்கள். நவம்பர் 26 அன்று தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை மக்களிடம் அறிவிப்பது என்றும், நவம்பர் 27 அன்று தேசியத் தலைவருக்கான அஞ்சலியை செய்வது என்றும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

கேபியின் கைதை அடுத்து இந்த இணக்கப்பாடு குப்பையில் தூக்கிப் போடப்பட்டது. அது கூடப் பரவாயில்லை. நவம்பர் 26 அன்று கேக் வெட்டி களியாட்டம் ஆடிய ஆபாசமும் நடந்தது.

தன்னுடைய இனத்திற்காக வாழ்ந்து தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அந்த இனத்திற்காக கொடுத்த ஒரு பெரு மனிதனுடைய இறப்பை மூடி மறைப்பது மாத்திரம் அன்றி, அந்த மனிதன் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லியபடி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவது எனக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.

தேசியத் தலைவரின் பிறந்த நாளை நினைவு கூருவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்கு முன்பு அந்த மனிதனின் இறந்த நாளை நினைவு கூர வேண்டும். மாவீரர் தினத்தில் மரியாதை செய்ய வேண்டும்.

இது நடைபெறாதவரை தமிழர்களால் நடத்தப்படுகின்ற அனைத்து மற்றைய நினைவுகூரல்களும் முழுமையடையாத ஒன்றாகவே இருக்கும்.

கலைஞர்கள் விடுத்த வேண்டுகோள்

ஆனாலும் தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவது என்பது சாதரணமாக செய்து விட்டுப் போகின்ற ஒரு விடயம் இல்லை. அது மிகவும் சவாலான விடயம். பெரும் வலிகளை ஒவ்வொரு தமிழனுக்கும் கொடுக்கின்ற ஒரு நிகழ்வு அது.

சாவே வராத ஒரு மனிதனாக நம்பப்பட்டவர் தேசியத் தலைவர். அவரால் மட்டுமே தமிழர்களை மீட்க முடியும் என்கின்ற உறுதியான நம்பிக்கை தமிழர்களிடம் இருந்தது. அவருக்கு சாவு வந்தது என்பதையும் தமிழர்களின் விடுதலை தள்ளிப் போய் விட்டது என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் மனம் ஒப்பாது.

அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்பவர்களில் கூட பலரும் இன்னும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமது மனதை தயார்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடு ஒன்றில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான கலைஞர்களின் கூட்டம் நடந்தது. சில மாதங்களிற்கு முன்பு தேசியத் தலைவருக்கு மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி அக் கூட்டத்திற்கு வந்திருந்த ஓரிரு கலைஞர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர்கள் அங்கே அது பற்றிய பிரச்சனையை எழுப்பினார்கள். உணர்ச்சிபூர்வமான உரையாடல்கள் அங்கே நடந்தன. பெரும்பாலான கலைஞாகள் ஒரு விடயத்தில் உறுதியாக நின்றார்கள். எக் காரணம் கொண்டும் தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பது போன்ற எந்த அறிவிப்பும் மாவீரர் நாள் மேடையில் செய்யப்படக் கூடாது என்று அவர்கள் விடாப்பிடியாக கூறினார்கள்.

அப்படி ஒரு அறிவிப்பு அங்கே நடைபெறுமாகில் அதன் பின்பு நிகழ்ச்சிகளை தரக் கூடிய மனநிலையில் நாம் இருக்க மாட்டோம் என்றும் அந்த வலியினை எம்மால் தாங்க முடியாது என்றும் அவர்கள் கூறினார்கள். தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும், ஆனால் அப்படி ஒரு அறிவிப்பை ஏற்றுக் கொள்ளுகின்ற மனத் தைரியம் எம்மிடம் இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.

தேசியத் தலைவரின் இறப்பை அறிவிப்பது இல்லை என்கின்ற முடிவு ஏற்கனவே அதிகாரம் மிக்கவர்களினால் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் சுயநலன் மட்டுமே காரணமாக இருந்தது. இந்த நிலையில் இந்தக் கலைஞர்களின் வேண்டுகோளும அவர்களுக்கு ஒரு
காரணமாக வாய்த்து விட்டது.

இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதன் காரணம் தேசியத் தலைவரின் இறப்பை ஏற்றுக் கொள்கின்ற மனநிலை பெரும்பாலான தமிழர்களுக்கு இன்னும் உருவாவில்லை என்பதை விளக்கவே.

கசப்பான உண்மையை விட இனிமையான பொய்யை மனித மனம் விரும்புகிறது. பின்பு அதை நம்புகிறது. பொய்யர்களுக்கு இது ஒரு வசதியாகப் போய்விட்டது.

சுயநலனுக்காக தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்பவர்கள் தற்போதைக்கு மாறப் போவது இல்லை. அவர்களை மாற்ற வேண்டிய தேவையும் இல்லை. மக்கள் மாறியதன் பின்பு தமது வியாபாரத்தின் பொருட்டு இந்த சுயநலவாதிகளும் மாறி விடுவார்கள்.

ஆனால் தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துகின்ற மனத் தைரியத்தை சாதாரண தமிழர்களுக்கு உருவாக்கவதற்கான வேலைத் திட்டங்களை செய்தாக வேண்டும்.

யார் தடுத்தாலும் அடுத்த ஆண்டு அகவணக்கம் செலுத்தியே தீருவோம்

தமிழினம் தேசியத் தலைவரின் வீரச் சாவை ஏற்று அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற அந்த வலி மிகுந்த கட்டத்தை தாண்டினால் மட்டும்தான் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். போராட்டம் புது வடிவம் பெறும்.

ஆகவே தமிழினத்தின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்புகின்றவர்கள் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்கின்ற உண்மையை மீண்டும் மீண்டும் பேச வேண்டும். அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற மனத் தைரியத்தை தமிழர்களுக்கு வரச் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு மாவீரர் நாளுக்குள் இதைச் சாதிக்க முடியாது. ஆயினும் 2011ஆம் ஆண்டின் மாவீரர் நாளுக்குள் இதைச் செய்ய முடியும். இன்னும் கடுமையாக முயன்றால் மே 19க்குள் இதைச் செய்ய முடியும்.

இந்த 2010இல் மாவீரர் நாள் முழுமையாடையாத ஒரு நினைவுகூரலாக நடைபெறுவதை பொறுத்துக் கொள்வோம். நவம்பர் 26இல் நடைபெறக் கூடிய களியாட்டங்களையும் சகித்துக் கொள்வோம். வேறு வழியில்லை.

ஆனால் 2011இல் மே 17இல் இருந்து மே 19வரை எமது மக்களையும் தளபதிகளையும் தேசியத் தலைவரையும் நினைவுகூருவோம். உண்மையையும் தலைவனையும் நேசிப்பவர்கள் இதைச் செய்வோம். அப்படியே 2011ம் ஆண்டின் மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்கு தக்க மரியாதை அளிக்கும்படி அழுத்தங்களை கொடுப்போம்.

இது முடியாது போனால் 2011இல் தலைவனை நேசிப்பவர்கள் தனித்து வேறொரு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடுக்க முடியாது போகும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

Posted in தமிழீழம், புலம்பெயர் அரசியல் | Read More »

Comments

kannan on 15 November, 2010 at 8:06 am #

உண்மை சபேசன் இதை நான் நிறைய பேரிடம் சொன்னேன் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்


webeelam on 15 November, 2010 at 12:26 pm #

கண்ணன்,

சில இதை பேசக்கூடாத ஒரு விடயமாக ஆக்கிவிட்டார்கள். ஆனால் உண்மையை பேச வேண்டும். என்னையும் ஒரு மாதிரத்தான் பார்க்கிறார்கள். ஆனால் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்பவர்களை ஒரு மாதிரிப் பார்க்கின்ற காலம் வரும். தொடர்ந்து உங்களுக்கு சரி என்று படுவதை பேசுங்கள்! எழுதுங்கள்!


Nanthan on 15 November, 2010 at 3:13 pm #

தேசியத் தலைவர் உயிரோடு……

தமிழீழத் தேசியத் தலைவரின் 56 வது பிறந்தநாள் விழா

http://www.youtube.com/watch?v=zI4JPqE9N_A


webeelam on 15 November, 2010 at 9:46 pm #

தேசியத் தலைவர் உயிர்ப்போடு இருக்கிறார்.
எங்கள் மனதில் அவர் என்றும் உயிர்ப்போடு இருக்கிறார். இருப்பார். இதுதான் உண்மை.


k.pathi on 27 November, 2010 at 9:17 am #

yes,HE WILL CONINUE TO LIVE in all tamilmen’s HEART


ஈழன் on 1 December, 2010 at 4:35 pm #

தலைவர் வீர மரணமா? நம்ப முடியவில்லையே! கடைசி யுத்தத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்கிறார்கள்!
தமிழர்களுக்கு மட்டும் தான் எப்போதும் தங்களுக்குள் மாற்று கருத்து உள்ளது. சிங்களம் அப்படி இல்லை.
எப்போது தான் தமிழர் ஓன்று சேர்வார்கள்?
என்ன நடக்குது?


ponniah on 28 December, 2010 at 7:54 pm #

Sabesan,
I believe that you receive substantial amount from KP for your service and i do not receive anything. I know the truth and i have reasons to believe that our leader and some of his family members are alive. Secondly, the international head office has been abolished and all of the workers have been removed in May 2009. It does not exist but it holds substantial amount of money which should be handed over to LTTE when it comes to light.Those who come with student visa to UK and as asylum seekers to other countries receive money from KP. they are under the instrution of KP

Kaddumaram B.A (Hons) LL.B


மணிமகன் on 30 December, 2010 at 7:26 pm #

ஆக்க ரீதியான கருத்தை துணிச்சலாக வெளியிட்டிருக்கிறீர்கள்.ஈழப்போர் அடுத்த கட்டத்தை எட்ட இதுவே சரியான அணுகுமுறையாகவும்,சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பதாகவும் அமையும்.இன்னொரு சுபாஷ் சந்திர போஸ்-ன் கதை வேண்டாம்.அந்தக் கதை போல மாவீரன் பிரபாகரனின் கதையும் பேசப்படுவது அவர் விரும்பிய ஈழக்கனவை நனவாக்க உதவாது என்பதை உண்மையான ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உணரவேண்டும்.


Tamilarasu on 4 January, 2011 at 3:28 pm #

Do you have any other evidence? No! You have the same evidence, which provided by Sri Lankan government. I don`t wanna argue, he is alive or dead. But we need 100% proof to take a decision.
Well Sabesan, you were and are the person, who always criticized the LTTE`s foreign organisations/structures. You have always disliked these people and their activities. Your argument was, that they don`t have the qualification and knowledge to lead the political works abroad.
Now there is no LTTE (present!)…so it`s your time!
If you wanna do something for Tamileelam, then you can do your work without any quarrel. Your critics or controversy won`t take anyone one step further.


Tamilarasu on 4 January, 2011 at 3:31 pm #

Small request:
Please post all comments (exception: vulgar comments!) and don`t prefer the comments, which reflect your mindset!


Murali on 8 February, 2011 at 1:59 pm #

காலம் கடந்த ஞானமாகவே எனக்குப்படுகிறது. ஈடு இணையில்லாத, தனது குடும்பத்தையே ஈழத்தமிழரின் விடிவிற்காய் தானம் செய்து, இந்த உலகிற்கே தமிழர்கள் என்றால் யார் என்று காட்டிய அந்த தலைவனின் வீரச்சாவு மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டது. அதுவும் விடுதலைப்புலிகள் என்று உலக நாடுகளில் தம்மை வெளிக்காட்டித் தம்பட்டம் அடித்தவர்களாலேயே கொச்சைப்படுத்தப்பட்டது மிக மிகக் கேவலம். தமிழன் என்று சொல்லப்படும் இனத்துக்கே மிக மிக கேவலம். துரோகி என்று சொல்லப்படும், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கே மிகக் கேவலமான இழுக்கை ஏற்படுத்திய கருணாவே தலைவரின் உடலைப் பார்த்துவிட்டு உறுதிப்படுத்தும் அறிக்கையை விடும்பொழுது குரல் தழுதழுத்தான். காரணம் தமிழர்கள் தமது பாதுகாப்பு அரணை இழந்து விட்டார்கள் என்று அவன் அந்த தருணத்தில் உணர்ந்ததனால்த் தான். ஆனால் தாங்கள் தான் உண்மையான விடுதலைப் போராளிகள் என்று சொன்ன பல தளபதிகள் இன்று ஈழத்திலே போராடத்திற்கு ஆதரவளித்த பொதுமக்களையும் போராளிகளையும் காட்டிக் கொடுக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் செயற்பாட்டாளர்களும் அந்த உன்னதமான தலைவனின் தியாகத்தை மறைத்து, மக்களால் நேசிக்கப்பட்ட அந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு மெழுகுவர்த்தி கூட ஏற்றவிடாமல் தடுத்து விட்டார்கள். இவர்கள் எப்படி இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டு செல்லப்படுவதற்கு உறுதுணையாக இருக்கப்போகிறார்கள்? எப்படி தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழ்மக்களையும், கூறாகப் பிரிந்து கிடக்கும் விடுதலைப்புலிகளையும், புலிகளின் ஆதரவாளர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்க்கப் போகிறார்கள்?


Thileeban Thambi Suresh on 14 February, 2011 at 12:17 pm #

சபேசன் அவர்களே, இங்கே மரணத்தை வென்று வரலாற்றில் அனைவரும் நிலைத்து விடுவதில்லை.., ஆனால் சிலர் மட்டுமே அத்தகைய பெருநிலை அடைகிறார்கள்.., வாழும் நாளிலேயே அப்படிப்பட்ட பெருநிலை சிறப்பு பதிவுக்கு தகுதியானவர்களாக அடையாளங்காணப்பட்ட சிலருள் எங்கள் மாபெரும் தலைவனும் அடங்கியுள்ளார். ஆயினும் “பிறப்பு-இறப்பு” என்கிற வாழ்க்கையின் இயற்கை தொடக்க-முடிவு நிலைகளுக்குட்ப்பட்டே என் தலைவனின் வாழ்க்கையும் அமைந்து இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தே உள்ளோம்.., எங்கள் தலைவனை நாங்கள் மரணத்திற்க்கு அப்பாற்பட்டவராக காண்கிறோம் என்பது உண்மையாயினும் நாங்களும் யதார்த்த வாதிகளே.., அதாவது இன்ப/துன்ப உணர்வுகள் கலந்த மனிதர்களே.., ஒருவேளை எங்கள் தலைவர் இறந்து விட்டால் நிச்சயம் அந்நிகழ்வு எங்களை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை ஆனால் அந்நிகழ்வு ஒரு போதும் எங்களை “தேக்க நிலையிலே” வைத்து விடாது. உங்கள் கூற்றுப்படி தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று வைத்து கொண்டால் அதனை முழுதாய் ஏற்று கொள்ளும் “காரண+சாட்சியங்களை” இவ்வுலகத்திற்க்கு காட்டிட வேண்டிய கட்டாயம் சிங்கள அரசிற்க்கும் உண்டு உம்மை போல் நமது தேசியத்தலைவர் உயிரோடு இல்லை என்கிற கூட்டத்திற்க்கும் உண்டு.., ஆம் “அவர் இல்லை” என்கிற உங்களுடைய “சாட்சியங்கள்” முழுமை பெறாத போது “அவர் இருக்கிறார்” என்கிற எங்களுடைய “நம்பிக்கை”யை மட்டும் நாங்கள் ஏன் கைவிட வேண்டும்? கொல்லப்பட்டவர் இன்னார்தான் என்று உலகிற்க்கு நிருபிக்க வேண்டிய வாய்ப்புகளும் கட்டாயமும் ஆயிரம் இருந்த போதும் அதை முறைப்படி சிங்கள அரசு செய்திடாதது ஏன்? இதற்கு பதிலாய் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று எமக்கு தெரியும்.., ஆம் “தமிழர்களை “திரிசங்கு” நிலையில் வைத்திடவே இவ்வாறு சிங்களமும் இந்தியதேசியமும் (வெங்காயம்) கூடி நடத்திய நாடகம் இது” என்பீர்கள்.., பரவாயில்லை அவர்கள் எம்மை ஏமாற்றினார்கள் என்றே வைத்து கொள்வோம்.., ஆனால் அதே வேளையில் அவர்கள் கைகளில் எம் தலைவர் கிட்டிடா நிலையில் இந்த மேற் சொன்ன கூட்டம் அதன் சாரர்களை நம்ப வைக்கவே சில கோக்குமாக்கு வேலைகளை காட்டி பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று நாடகமாடியது என்பதற்கான மறுக்க முடியாத “சூழலும்” அமைந்துள்ளதை நீங்கள் மறுத்திட முடியுமா? கொல்லப்பட்டது உண்மை என்பதை நிருபித்திடாத வரை கொல்லப்படவில்லை மாறாக வாழ்கிறார் என்கிற மாற்று சிந்தனையும் உண்மையாகவே இருக்க வாய்ப்புள்ளது.., எனவே எழுதகூடிய களம் உங்களுக்கு கிட்டியுள்ளது என்கிற நிலையில் அவ்வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி உங்கள் “கருத்தை” எழுதியுள்ளீர்கள் ஆனால் அதே வேளையில் வாசிப்பாளனின் “சிந்தைக்குள்” உங்கள் “கருத்து” “திணிக்கப்படும்” என்கிற எண்ணோட்டத்தில் நீங்கள் இக்கட்டுரையை இங்கே பதித்திருப்பீர்களேயாயின்.., மன்னிக்கவும் நிங்கள் தோற்று வீட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.., ஆம்.., இக்கட்டுரை உங்கள் கருத்து மட்டுமே மாறாக இனத்தின் கருத்தல்ல..,


uma on 28 February, 2011 at 5:37 am #

இதை சொல்லத்தான் நீங்கள் கதிரையை விட்டு அசையாமல் இருக்கிறீங்களோ? மானங்கெட்ட பிழைப்பு!


uma on 28 February, 2011 at 5:38 am #

தமிழீழம் எங்கள் உயிர்! அவ்வுயிரே எங்கள்தேசிய தலைவர்! தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99